மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் : எரிபொருள் விலைகள் குறையும் என்கிறார் அமைச்சர் குமார ஜயக்கொடி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 23, 2025

மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் : எரிபொருள் விலைகள் குறையும் என்கிறார் அமைச்சர் குமார ஜயக்கொடி

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்கு கடனாக வழங்க வேண்டிய ரூபா 884 மில்லியனை செலுத்துவதற்காக ஒரு லீற்றர் எரிபொருளில் 50 ரூபாவை அறவிட வேண்டியுள்ளதாக, வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இக்கடனை செலுத்தி முடிவுற்றதும் எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இக்கடனில் சுமார் அரைவாசியை இதுவரை மீள செலுத்தி உள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எரிபொருள் கொள்வனவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், எதிர்க்கட்சி எம்.பி தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தமது கேள்வியில், எரிபொருள் கொள்வனவில் கடந்த காலங்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், கொள்வனவின் போது துறை சார்ந்த அமைச்சராக இருந்த கஞ்சன விஜேசகரவின் பைகளுக்கு பெருமளவு நிதி சென்றுள்ளதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வினவினார்.இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் கொள்வனவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணை முடிவில் அவ்வாறு மோசடி நடந்துள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். அதுவரையில் மோசடி நடந்துள்ளதா? இல்லையா? என்று கூற முடியாது.

பிரிமியம் ஊடாக நிதி எவருடைய பைகளுக்குள் போனாலும் வரியாக பெறுவது அவர்களின் பைகளுக்கு போக முடியாது. அந்நிதி அரசாங்கத்திற்கே கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment