தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் காலமானார்.
விபத்தில் சிக்கியதால் 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கோமாவில் இருந்த 36 வயதான சவுதி இளவரசர் அல்வலீத் பின் காலித் சனிக்கிழமை (19) காலமானார்.
அவருடைய மறைவை, அல் வாலீத்தின் தந்தையான இளவரசர் கலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் உறுதி செய்துள்ளார்.
இதேவேளை அவரது மரணத்தை உறுதிப்படுத்திய இளவரசர் கலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆழ்ந்த சோகத்துடனும், துக்கத்துடனும், எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்வலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் இன்று காலமானார்'. இறுதிச்சடங்கு இன்று (20) ரியாத்தில் உள்ள பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு இலண்டனில் உள்ள இராணுவ அகாடமியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கினார் இளவரசர் அல்வலீத். அப்போது முதல் அவர் கோமாவில் இருந்து வந்தார்.
அறுவை சிகிச்சையின்போது, மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் அவரை குணப்படுத்த இயலவில்லை. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அவர் படுத்த படுக்கையிலேயே சுயநினைவின்றி இருந்து வந்தார்.
வைத்தியர்கள் கைவிரித்தாலும் இத்தனை ஆண்டுகளாக இளவரசர் காலித் தனது மகனை குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை. தொடர்ந்து மகனை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இஸ்லாமிய நிகழ்வுகளின்போது தனது மகன் குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்தும் வந்தார்.
2005ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, இளவரசர் அல்வலீத் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவ நகரத்திற்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் இருந்து வந்தார்.
அவரை மீண்டும் காப்பாற்றும் நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் உலகம் முழுவதிலுமிருந்து மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்தனர். அவ்வப்போது நம்பிக்கை அளிக்கும் அசைவுகள் தென்பட்டாலும், பல ஆண்டுகளாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த அல்வலீத் பின் காலித் தனது 36ஆவது வயதில் உயிரிழந்ததாக அவரது தந்தையும் இளவரசருமான கலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
இவர், சவுதி அரேபியாவை கட்டமைத்த அரசர் அப்துல் அஸிசின் கொள்ளு பேரனாவார். 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி பிறந்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு 36 வது வயது பிறந்தது.
No comments:
Post a Comment