சந்தேகநபர்கள், சாட்சியாளர்களுக்கு தெளிவுபடுத்தலை வழங்க வேண்டும் : பதில் பொலிஸ்மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, July 6, 2025

சந்தேகநபர்கள், சாட்சியாளர்களுக்கு தெளிவுபடுத்தலை வழங்க வேண்டும் : பதில் பொலிஸ்மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கை

(இராஜதுரை ஹஷான்)

ஏதேனும் விசாரணைக்காக சந்தேகநபர்கள், சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த தரப்பினருக்கு பொலிஸார் போதுமான தெளிவுபடுத்தலை வழங்க வேண்டும். தொலைபேசி மற்றும் வேறு வழிகளில் அழைக்கும்போது பொலிஸார் முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டி பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.

விசாரணை நடடிக்கைகளுக்காக ஆட்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் என்று தலைப்பிடப்பட்டு குறித்த விசேட சுற்றறிக்கை பதில் பொலிஸ்மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல்வேறு வழிமுறைகளில் பொலிஸ் நிலையத்துக்கு ஆரம்ப தகவல்கள் கிடைக்கப் பெறுகின்ற நிலையில், ஆரம்ப தகவல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பாகவுள்ள உத்தியோகத்தருக்கு உண்டு.

அதற்குரிய சட்ட ரீதியிலான ஏற்பாடுகள் 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 1980 ஆம் ஆண்டு 52 ஆம் இலக்க சட்டத்தின் (திருத்த) குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் 109 பிரிவு மற்றும் 110 பிரிவு தொடர்பில் தாங்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

ஏதேனும் குற்றம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஆரம்ப தகவல்களுக்கமைய விசாரணையின் தேவைக்கமைய பொலிஸ் நிலையத்துக்கு சந்தேகநபர்கள், சாட்சியாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் உட்பட நபர்களை அழைக்கும்போது பின்வரும் விடயங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும், அதற்கமைய செயற்பட வேண்டும்.

முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபரின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போதுமான அறிவித்தலை குறித்த சந்தேகநபருக்கு அளித்தல் வேண்டும்.

முன்னெடுக்கப்படும் விசாரணைக்குரிய எவரேனும் நபரை சாட்சியாளராக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கும்போது குறித்த நபரின் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்வதன் அவசியம் தொடர்பில் போதுமான தெளிவுபடுத்தலை குறித்த நபருக்கு அளித்தல் வேண்டும்.

முதலிரண்டு சந்தர்ப்பங்களை காட்டிலும் வேறேதும் சந்தர்ப்பத்தில் எவரேனும் நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பதாயின் அந்த நபரை அழைப்பதற்கான உரிய காரணத்தை அந்த நபருக்கு தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.

சந்தேகநபர்கள் மற்றும் சாட்சியாளர்களை பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி ஊடாக அழைத்தல் அல்லது வேறு வழிகளில் அழைக்கும்போது குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும்.

முறைப்பாட்டாளர் அல்லது பாதிக்கப்பட்டோர் அல்லது சாட்சியாளர் ஆகியோருக்கு ஏற்படும் அழுத்தங்களை கருத்திற்கொண்டு முறைப்பாட்டாளர் அல்லது பாதிக்கப்பட்டோர் அல்லது சாட்சியாளர் ஆகியோரின் பெயர், அது தொடர்பில் வினவும் பிறிதொரு நபருக்கு அறிவித்தல் தொடர்பில் விசாரணைக்குரிய காரணிகளை பரிசீலனை செய்து, நிலைய பொறுப்பதிகாரியின் தீர்மானத்துக்கு அமைய செயற்பட முடியும்.

இந்த விடயம் தொடர்பில் தங்களின் கீழ் சேவையாற்றும் சகல உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment