(லியோ நிரோஷ தர்ஷன்)
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இவ்வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின்போது கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. புதன்கிழமை (09) உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
இந்த விவாதம் இதற்கு முன்னரும் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட போதிலும், பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட சூத்திரதாரிகள் குறித்து எந்த வெளிப்பாடுகளையும் அரசாங்கம் கூறவில்லை.
எனவே புதன்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு விவாதத்தின்போது, உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தத்தை பிரயோகிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னும் பின்னும், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்துவோம் என்று அநுரகுமார திசாநாயக்கவும் அவரது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் உறுதியளித்திருந்தனர். ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட பல சந்தர்ப்பங்களில் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக அரசாங்கம் கூறியது.
2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் 6 ஆண்டுகள் பூர்த்தியாகியிருந்த நிலையில், அன்றையதினம் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. எனினும் அவ்வாறு வெளிப்படுத்தப்படவில்லை. ஆகவே பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபடவுள்ளது.
இதேவேளை, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் திருநிலைப்படுத்தலின் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாளை திங்கட்கிழமை, பேராயர் இல்லத்தில் சிறப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்க ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment