இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% சுங்க வரி (Reciprocal Tariff) விதிக்க தீர்மானித்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அறிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு வெள்ளை மாளிகையால் அனுப்பப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
முன்னதாக, ஏப்ரல் 02ஆம் திகதி, இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்படுவதாக அறிவித்த போதிலும், அது அமுல்படுத்த ஜூலை 09ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, அந்த வரி 30% ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன், 2025 ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தில், நீங்கள் (இலங்கை) உங்கள் இறக்குமதி வரிகளை உயர்த்த முடிவெடுத்தால், நீங்கள் உயர்த்தும் அளவுக்கு இணையாக, 30% கட்டாய வரிக்கு மேலதிகமாக அதேயளவான வரி சேர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வரிகள், இலங்கையின் நீண்டகால வரி மற்றும் வரி விலக்கு, வணிக முறைகள் போன்றவற்றால் அமெரிக்கா எதிர்கொண்ட சமநிலையற்ற வர்த்தக ரீதியான நஷ்டங்களை சரிசெய்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள விளக்கத்தில், இந்த வரிச்சுமை 44% இலிருந்து 30% ஆக குறைக்கப்பட்டமையானது, இலங்கை அரசு சாதகமான முன்னேற்றமாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.
தற்போது வரி சுமை குறைக்கப்பட்ட நாடுகளில் இலங்கையே மிக அதிகம் குறைந்த வரி விதிப்பை பெற்றுள்ளதாக, இது குறித்து வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
இது இலங்கை - அமெரிக்கா இடையேயான வலுவான இருதரப்பு உறவுகளையும், வெளிநாட்டு பணியமைப்பின் தாக்கத்தையும் காட்டுகிறது.
ஏனைய நாடுகளுக்கான வரிகள்
அல்ஜீரியா, ஈராக், லிபியா - 30%
புரூனை, மொல்டோவா - 25%
பிலிப்பைன்ஸ் - 20%
இவை தவிர கடந்த திங்கட்கிழமை மேலும் 14 நாடுகளுக்கான புதிய வரிகளை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அத்துடன் பிரேசிலுக்கு 50% வரி விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment