(எம்.ஆர்.எம்.வசீம்)
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டு, அடுத்த வருடம் முதல் காலாண்டிலாவது தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பியுள்ள கடித்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சியின் தேவைக்கேட்ப மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துதல், பகுதி பகுதியாக நடத்துதல் கடந்த காலத்தில் பல அரசாங்கங்கள் தங்களின் வெற்றிக்கான தந்திரமாக பயன்படுத்துவது தொடர்ந்து காணக்கூடியதாக இருந்த விடயமாகும்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில், 201717ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் வாக்களிப்பு திருத்த சட்டத்தின் ஊடாக மாகாணசபை தேர்தல் முறைமை திருத்தம் மேற்கொள்ளல், அதற்கு ஏற்புடைய சட்ட நிலைமைகள், எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடையாமை போன்ற காரணங்களின் அடிப்படையில் மாகாணசபை தேர்தல் கைவிடப்பட்டிருக்கிறது.
11 வருடங்களுக்கும் அதிக காலம் சென்றும் இதுவரை எங்களால் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாமல் போயிருக்கிறது. இறுதியாக 2014 செப்டம்பர் 20ஆம் திகதி ஊவா மாகாணத்துக்கான தேர்தல் இடம்பெற்றது. அது இற்றைக்கு 11 வருடங்களுக்கு முன்பாகும்.
அதன் பிரகாரம் அதிகமான மாகாணசபைகள் 6 வருடங்களுக்கும் அதிக காலத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நிர்வகிகப்பட்டு வருகின்றன. இது ஒரு நல்ல ஜனநாயக அடையாளம் அல்ல. இதற்காக தற்போதை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டியில்லாவிட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு இருந்துவும் தடைகளை நீக்கி, மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இந்த காலப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்ட திருத்தத்துக்கான இரண்டு தனிநபர் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டு, அடுத்த வருடம் முதல் காலாண்டிலாவது தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாகாண சபை முறைமை தொடர்பில் அல்லது தேர்தல் முறைமை தொடர்பில் முரண்பாடு இருக்குமானால் அதுதொடர்பில் எதிர்வரும் காலங்களில் கலந்துரையாடி தீர்மானித்துக்கொள்ள முடியும் என்பதுடன் விரைவாக தேர்தலை நடத்துவதற்காக பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு குறுகிய சட்ட திருத்தம் பொருத்தம் என பிரேரிக்கிறோம்.
அத்துடன் பழைய முறைக்கு தேர்தலை நடத்துவதற்காக குறுகிய கால சட்ட திருத்தம் கொண்டுவருவதாக இருந்தால், பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக வேட்புமனுக்களில் 25 சதவிகிதம் ஒதுக்குவதையும் அதில் உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment