ஆங்கிலப்பாட வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ள 110 டிப்ளோமாதாரர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, July 28, 2025

ஆங்கிலப்பாட வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ள 110 டிப்ளோமாதாரர்கள்

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலப்பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 110 டிப்ளோமாதாரர்கள் இரண்டாம் கட்டமாக நியமனம் செய்யப்படவுள்ளனர். 

இந்த நியமனம் தொடர்பான பரீட்சைப் புள்ளிகள் அடிப்படையில் மாகாண மட்டத்தில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் மூன்றாம் தரத்தில் (3-1) நியமனம் வழங்கப்படவுள்ளது. 

இந்நியமனம் வழங்கும் நிகழ்வு இம்மாதம் 29 மற்றும் 31ஆம் திகதிகளில் கல்வியமைச்சில் இடம்பெறவுள்ளது.

மேற்படி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமன கடிதம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட தினத்தில் காலை 9.30 மணிக்கு பத்தரமுல்ல இசுருபாய கல்வி அமைச்சுக்கு வருகை தருமாறு கல்வி அமைச்சின் தாபனப் பிரிவின் மேலதிக செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய தெரிவித்துள்ளார். 

பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் கடந்த 2021.12.12 ஆம் திகதி நடாத்தப்பட்ட எழுத்து மூலப்பரீட்சை மற்றும் 2024 மே மாதம், ஒக்டோபர், டிசம்பர் மாதங்களில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட பொது நேர்முகப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சை புள்ளிகளின் கூட்டுத் தொகைக்கமைய தேசிய பாடசாலைகளில் ஆங்கிலப் பாடத்திற்கு இரண்டாம் கட்டமாக இந்த நியமனம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிரியர் நியமனம் பெறத்தெரிவானவர்கள் தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கமைவாக பாடசாலைக்குரிய விருப்பினைத் தெரிவிக்க வேண்டும். 

நியமனம் பெறுவோரின் புள்ளிகள் கூட்டுத்தொகை முன்னுரிமை வரிசைக்கமைய பாடசாலைகள் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆங்கில ஆசிரியர் நியமனத்துக்கு தகுதி பெற்ற நூற்றுப்பத்து பேரில் 21 சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம்கள் உள்ளடங்கியுள்ளனர்.

இந்த நியமனத்துக்கு மாகாண வாரியாக மேல் மாகாணம்-23, வடமேல் மாகாணம்-17, ஊவா மாகாணம்-15, மத்திய மாகாணம்-15, சப்ரகமுவ மாகாணம்-14, கிழக்கு மாகாணம்-14, வடமத்திய மாகாணம்-12 பேரும் இரண்டாம் கட்ட ஆங்கில ஆசிரியர் நியமனத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment