கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் சாத்தியம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 14, 2025

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் சாத்தியம்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியை ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியை தவிர்த்து ஏனைய ஒரு சில எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதாயின் அரசியல் கட்சியொன்று தனித்து 59 ஆசனங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பெரும்பான்மையை பெற வேண்டும். இருப்பினும் வெளியாகியுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எந்த அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பலத்தை பெறவில்லை.

ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும் கைப்பற்றின.

இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்றுக் கொண்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை 69 ஆக காணப்படுகின்ற நிலையில், கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கடும் சிக்கல் நிலை ஏற்பட்டது.

இவ்வாறான பின்னணியில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஒன்றிணையுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த அழைப்புக்கு அமைய கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு இடையில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இருப்பினும் ஒரு சில காரணிகளால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

339 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2025.06.02ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அன்றையதினம் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் உள்ளூராட்சி மன்ற ஆணையாளரால் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதன்போது 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் தரப்பினர் மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியும்.

இந்த வாக்கெடுப்பில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியை தவிர்த்து ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறான நிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விரெய் கெலி பல்தஸார் கொழும்பு மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.

No comments:

Post a Comment