(எம்.மனோசித்ரா)
பிரித்தானியாவில் அதிக இலாபமீட்டும் நிறுவனங்களில் நெக்ஸ்ட் நிறுவனம் நான்காவது இடத்திலுள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் யூரோ இலாபம் காணப்படுகிறது. எனவே தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து தொழிலாளர்களுக்கு தொழிலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுதந்திர வர்த்தக வலய சேவையாளர் சங்கத்தின் இணை செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்தார்.
பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவுடன் தொழில் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நெக்ஸ்ட் தொழிற்சாலை கடந்த 19ஆம் திகதி மாலை 5 மணியிலிருந்து மூடப்பட்டமை தொடர்பில் இரண்டாவது முறையாக பிரதி தொழில் அமைச்சருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடந்த வியாழனன்று அமைச்சர் நெக்ஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். அந்த பேச்சுவார்த்தை குறித்த அறிக்கை எமக்கு வழங்கப்பட்டது.
அதற்கமைய முகாமைத்துவத்தினால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை காரணிகளுடன் அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்.
இரு தரப்புக்குமிடையில் கையெழுத்திடப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் காணப்படுகிறது. அந்த ஒப்பந்தத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய நிறுவன முகாமைத்துவம் செயற்படவில்லை என்பதையும் அமைச்சரிடம் தெரிவித்திருக்கின்றோம்.
இரு தரப்பினரையும் ஒரே சந்தர்ப்பத்தில் அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு அமைச்சிடம் கோரியுள்ளோம். அதற்கு அமைச்சரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
எனவே நஷ்டஈடு செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு மீண்டும் தொழிற்சாலையை திறக்கும் நோக்கத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் வலியுறுத்தியிருக்கின்றோம்.
நாம் நஷ்டஈட்டைக் கோரவில்லை. தொழிலையே கோருகின்றோம். தொழில் ஆணையாளரிடம் செல்லாவிட்டால் மேலதிகக் கொடுப்பனவை செலுத்துவதாக நிறுவனம் முன்வைத்துள்ள முன்மொழிவையும் நிராகரித்துள்ளோம். இந்த நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் யூரோ இலாபம் காணப்படுகிறது.
பிரித்தானியாவில் அதிக இலாபமீட்டும் நிறுவனங்களில் நெக்ஸ்ட் நிறுவனம் நான்காவது இடத்திலுள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். அந்த வகையில் அமைச்சரும் குறித்த ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுவார் என நம்புகின்றோம்.
No comments:
Post a Comment