நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதை விட அவர்களது தொழிலைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, May 25, 2025

நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதை விட அவர்களது தொழிலைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

(எம்.மனோசித்ரா)

தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்துடன் சர்வதேச முதலீட்டு சபையும் இணைந்து நெக்ஸ்ட் நிறுவன முகாமைத்துவத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதை விட, அவர்களது தொழிலைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

தொழில் அமைச்சர் நெக்ஸ்ட் உற்பத்தி தொழிற்சாலை ஊழியர் சங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தொழில் அமைச்சு, தொழில் திணைக்களத்துடன் இணைந்து நெக்ஸ்ட் நிறுவனத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

21 மற்றும் 22ஆம் திகதிகளில் இந்நிறுவனத்துடனும், சர்வதேச முதலீட்டு சபையுடனும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

சேவையை நிறுத்துவதற்கான ஏற்பாட்டுக்கமைய தாம் நஷ்டஈட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அது மாத்திரமின்றி ஊழியர்களின் சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்டு மேலதிகக் கொடுப்பனவை வழங்குவதற்கான யோசனையையும் அந்நிறுவனம் முன்வைத்துள்ளது.

எவ்வாறிருப்பினும் தொழிலாளர்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. தொழிற்சாலையை மூடுவதைத் தடுத்து அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகவுள்ளது.

இரு தரப்பினரையும் ஒரே சந்தர்ப்பத்தில் அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்திருக்கின்றோம். தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்துடன் சர்வதேச முதலீட்டு சபையும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும்.

நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதை விட தொழிலாளர்களின் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 10 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனவேதான் இந்த தொழிற்சாலையை மூட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆண்டிகம மற்றும் நவகத்தேகட தொழிற்சாலைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே சந்தர்ப்பத்தில் இரு தரப்பினரையும் சந்தித்தால் மாத்திரமே தீர்வொன்றைக் காண முடியும் என்றார்.

No comments:

Post a Comment