(எம்.மனோசித்ரா)
இராணுத்தினர் அனைவரும் சிப்பாய் என்ற போதிலும், அனைத்து சிப்பாய்களும் இராணுவ வீரர்கள் அல்ல. யுத்த பூமியில் நேரடியாகப் போராடியவர்களே இராணுவ வீரர்களாவர். ஆனால் அனைவரையும் சிப்பாய்கள் என விளித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை அவமதித்து விட்டார் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (20) கொழும்பிலுள்ள பிவிதுரு ஹெல உருமய தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், புலி பிரிவினைவாதிகள் கோபித்துக் கொள்வர் என்ற அச்சத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய போர் வீரர் நிகழ்வினை புறக்கணிப்பதற்கு திட்டமிட்டிருந்தார். எவ்வாறிருப்பினும் தேசப்பற்றாளர்களான நாட்டு மக்களின் எதிர்ப்பினையடுத்து விருப்பமின்றி ஜனாதிபதி அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றியபோது, இராணுவ வீரர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு முயற்சித்தார். இது மணமகள் இன்றி திருமணத்தை நடத்துவதைப் போன்றதாகும்.
இராணுவ வீரர்களை கௌரவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். ஆனால் ஜனாதிபதி இராணுவ வீரர்களை இராணுவ சிப்பாய்கள் என்றே விளித்தார்.
இராணுத்தினர் அனைவரும் சிப்பாய் என்ற போதிலும், அனைத்து சிப்பாய்களும் இராணுவ வீரர்கள் அல்ல. யுத்த பூமியில் நேரடியாகப் போராடியவர்களே இராணுவ வீரர்களாவர். யுத்தத்தின்போது யுத்த பூமிக்குச் சென்று போராடியவர்களே இராணுவ வீரர்களாவர். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சகலரையும் சிப்பாய்கள் என அழைத்து அவர்களை அவமதித்திருக்கின்றார்.
யுத்தம் அபாயம் மிக்கது. பேரழிவானது. மீண்டும் யுத்தம் இடம்பெறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இராணுவத்தினரால்தான் யுத்தம் ஏற்பட்டது என்பதைப் போலவே ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது. யுத்தத்தின் அபாயத்தை இராணுவத்தினருக்கு புதிதாகக் கற்பிக்க வேண்டியதில்லை. அமைதியின் மதிப்பை அறிந்ததால்தான் இராணுவ வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்து அதில் வெற்றி கண்டனர்.
ஆனால் புலி பயங்கரவாதிகளுக்கு அது தெரியாது. அமைதியின் மதிப்பையும், யுத்தத்தின் பேரழிவையும் அறிந்திருக்காததன் காரணமாகவே அவர்கள் யுத்தத்தை ஆரம்பித்தனர்.
இராணுவத்தினர் முன்னிலையில் ஆற்றிய உரையை ஜனாதிபதி பயங்கரவாதிகளின் முன்னிலையிலேயே ஆற்றியிருக்க வேண்டும்.
எனவே பிரிவினைவாதத்தையும், இனவாதத்தையும் தூண்டிய தற்போது உங்களின் நெருங்கிய நண்பர்களாகவுள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் உலக தமிழ் பேரவையின் தலைவர் முன்னிலையில் சென்று இவ்வாறு உரையாற்றுங்கள் என ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment