ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் பேராசிரியர் ஐ.எம். கருணாதிலகவிற்கு வழங்கப்பட்டது.
பேராசிரியர் ஐ.எம். கருணாதிலக வைத்தியக் கல்வித்துறையின் முன்னோடி என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய கல்வி தொடர்பிலான முதலாவது பேராசிரியர் என்ற கௌரவத்திற்கும் உரித்தானவர்.
அவர் 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய ராச்சியத்தின் ஸ்கொட்லண்ட் டண்டீ பல்கலைக்கழகங்களில் (University of Dundee) பட்டம் பெற்றவர்.
அதேபோல் ஐக்கிய ராச்சியத்தின் உயர்கல்வி அக்கடமியிலும், எடின்பரோ ரோயல் வைத்திய அறிவியல் நிறுவனத்திலும் உயர் அங்கத்துவம் வகிக்கிறார்.
வைத்திய கல்வி தொடர்பிலான நிபுணத்துவம் காரணமாக பேராசிரியர் ஐ.எம்.கருணாதிலக்க சர்வதேச வரவேற்பை பெற்றுள்ளார்.
அவர் உலக சுகாதார அமைப்பு (WHO), உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), பிரஜைகள் சுகாதாரத்துக்கான ஆசிய பசுபிக் கல்வி சம்மேளனம் (APACPH) மற்றும் தென்கிழக்கு ஆசிய வலயத்தின் வைத்திய கல்வி சங்கம் (SEARAME) உள்ளிட் முன்னணி சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவதால் வலய மற்றும் உலக அளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்.
No comments:
Post a Comment