அரசாங்கத்தின் நிதி செலவிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து ஜெட் விமானத்தில் நாடு திரும்பினார் என தெரிவிக்கப்படும் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து நாடு திரும்புவதற்கு வியட்நாம் பௌத்த சங்கமே தனிப்பட்ட ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்து அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொண்டது என்பதே உண்மை எனவும் அமைச்சர் சபையில் தெளிவுப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில், நேற்று (08) நடைபெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அ’ அட்டவணையின் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹர்ஷண ராஜகருணா, ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் தொடர்பாக முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹர்ஷன ராஜகருண எம்.பி. தனது கேள்வியின்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி தனிப்பட்ட ஜெட் விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்தார். இந்த தனிப்பட்ட ஜெட் விமானத்துக்கான செலவை வியட்நாம் அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மறுபுறம் வியட்நாம் நாட்டின் வர்த்தக சங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனவே, இதில் உண்மை என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், வியட்நாம் ஜனாதிபதியின் அழைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் உற்சவம் ஆகியன வியட்நாம் நாட்டில் நடைபெற்றதால் அந்த அழைப்பை ஏற்று ஜனாதிபதியுடன் நாம் வியட்நாமுக்குச் சென்றிருந்தோம்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அந்த வெசாக் உற்சவம் நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்த நிகழ்வில் விசேட உரையாற்றினார்.
6 ஆம் திகதி காலையில் அந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், நாட்டுக்கு திரும்புவது கடினம் என நாம் அந்த ஏற்பாட்டாளர்களிடம் குறிப்பிட்டோம். அதனைக் கருத்திற்கொண்ட வியட்நாம் பௌத்த சங்கம், ஜனாதிபதிக்கு விசேட விமானத்தை ஏற்பாடு செய்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. அதன்படி, எமது அரசாங்கம் அதற்காக எந்த செலவையும் செய்யவில்லை.
இதேவேளை நாம் நாடு திரும்புவதற்கான செலவும் மிகுதியாகியுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment