(இராஜதுரை ஹஷான்)
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை வெளிப்படுத்தவும், பலமான அழுத்தம் பிரயோகிக்கவும் எதிர்க்கட்சிகள் கொள்கை அடிப்படையில் இணக்கமாக செயற்படுதல் அவசியமானது என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் இவ்வாரம் கூடவுள்ளது. கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச விடுத்த அழைப்பு குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. இவ்விடயம் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சுமார் 700 வரையான உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் சமகால அரசியல் செயற்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பெயர்ப்பட்டியல் அடிப்படையிலான உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபையில் தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலை ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்திக்கு அடுத்தபடியான உறுப்பினர்களை பெற்றுக் கொண்டுள்ளது. சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியும்.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் வலியுறுத்துவேன். பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாத காரணத்தால்தான் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் செயற்பட வேண்டும். பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாவிடின் பலமான அரச நிர்வாகமே தோற்றம் பெறும்.
அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவான கொள்கை அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment