ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களை பார்வையிடுவதற்கான அனுமதி இலங்கை இராஜதந்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மும்பாயிலுள்ள இலங்கையின் உதவி கொன்சியூேலட் ஜெனரல் சசிரங்க ஜயசூரிய மற்றும் கொன்சியூேலட் ஜெனரல் அலுவலக உள்ளூர் அதிகாரி சுப்ரமணியம் செட்டியா நாராயணன் ஆகியோருக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் மே மாதம் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு தடவை அஹமதாபாத் மத்திய சிறைச்சாலைக்கு விஜயம் செய்து நான்கு இலங்கையர்களையும் சந்திக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சினால் மும்பாயிலுள்ள கொன்சியூேலட் ஜெனரல் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையினைச் சேர்ந்த முஹம்மத் நப்ரான், முஹம்மத் நுஸாரத், அப்துல் றஹீம் முஹம்மத் ரசீதீன் மற்றும் முஹம்மத் பாரீஸ் ஆகியோர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இந்தக் கைது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment