உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி பெரும்பாலான சபைகளில் ஆட்சியமைக்க முடியாத தொங்கு நிலையொன்று ஏற்பட்டுள்ளது. எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெறாத நிலை ஏற்பட்டுள்ளமையினால் கூட்டிணைந்து அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக வெற்றி பெற்ற கட்சிகளும் சுயாதீனக் குழுக்களும் கூட்டணியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளும் கட்சியினால் பெரும்பான்மை பெற முடியாமல் போன சபைகளில் எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.
குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி சார்பான குழுக்களும் இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.
அத்துடன், சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளும், மலையக கட்சிகளும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
இது தொடர்பாக நேற்றையதினம் பிரதான எதிர்க்கட்சிகள் கருத்து வெளியிட்டிருந்தன.
ஐக்கிய மக்கள் சக்தி
சகல எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி வலுவான பொது எதிணியை உருவாக்க மக்கள் வழங்கிய ஆணையை முழு மூச்சுடன் முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றையதினம் வெளியிட்ட விசேட அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களிலும் பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளமையை உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்கள் இத்தேர்தலின் ஊடாக எமக்கு முன்வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை கையாண்டது போலவே இந்த உள்ளூராட்சித் தேர்தலையும் ஜே.வி.பி கையாண்டது. தேர்தலுக்காக மதத்தைக் கூட அரசாங்கம் பயன்படுத்தியது.
நாட்டு மக்கள் அரசாங்கத்தின் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர்.
பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொய்களை முறியடித்து, உண்மையான பலம் வாய்ந்த மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்புகளையும் ஒன்றிணைய வேண்டும் என்ற பொதுமக்களின் அபிலாஷையின் அடிப்படையில் இந்த சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பவர்களாக, நாங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தலைவணங்கி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைப்போம். அதன் ஊடாக வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், கொள்கை ரீதியானதுமான சிறந்த மக்கள் சேவையை வழங்க உள்ளோம். இதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் யோசனை தொடர்பில் விரிவாக பரிசீலனை செய்வோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கட்சி என்ற ரீதியில் பாரிய சவால்களை எதிர்க்கொண்டிருந்தோம். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வேட்பாளர் ஒருவரை கூட களமிறக்குவற்கு முடியாத நிலைமை காணப்பட்டது. கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக நெருக்கடியான நிலையில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்தோம்.
கட்சி பாதுகாக்கப்பட்டதால்தான் இன்று எம்மால் தேர்தலில் சுயாதீனமான முறையில் போட்டியிட முடிந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் பெறுபேற்றைக் காட்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்னேற்றமடைந்துள்ளோம்.
ஒருசில உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சிரேஷ்ட அரசியல் அனுபவத்துக்கு அமைய அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயத்தை நாங்கள் விரிவாக பரிசீலிப்போம்.
தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பினை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது. நிறைவடைந்த 6 மாத காலத்தில் நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொண்டார்கள். அரசாங்கத்தின் மீதான அதிருப்தி தற்போது வெளியாகியுள்ளது. இது முடிவல்ல ஆரம்பம் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி
நான் சொன்ன ஆலோசனையின் பிரகாரம் செய்திருந்தால் எதிர்க்கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் தெரிவித்த ஆலோசனையின் பிரகாரம் ஐம்பது முதல் நூறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால், கணிசமான எண்ணிக்கையிலான சபைகளை வெற்றி பெறுவதற்கு இடம் இருந்தது. குறிப்பாக கொழும்பில் மாத்திரம் இவ்வாறானதொன்றை செய்திருக்கலாம். நாங்கள் தெரிவித்ததுபோல் எதிர்க்கட்சி ஒன்றிணையாததால் மக்கள் பிளவுபட்டு வாக்களித்துள்ளனர்.
ஐந்து வருடங்களுக்கு பின்னர் நாங்கள் யானை சின்னத்தில் போட்டியிட்டோம். இதை ஒரு தொடக்கமாகக் கருதலாம். சில பகுதிகளில் எமது பெறுபேறுகள் திருப்தியாக உள்ளன. இப்போது ஐக்கிய தேசியக் கட்சி புதிதாகச் செயற்பட வேண்டியுள்ளது. இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி மக்களுக்கு சில வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் கூறுவது பொய் என்பது தமக்கு தெரியும் என்பதை மக்கள் இந்த தேர்தலில் உணர வைத்திருக்கின்றனர். பாராளுமன்றத்தில் 159 பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு மக்கள் இந்த செய்தியை வழங்கியிருக்காவிட்டால் அடுத்த 4 ஆண்டுகளுக்கும் இவர்களின் பொய்கள் தொடர்ந்திருக்கும். எவ்வாறிருப்பினும் மக்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
தற்போது அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே அரசாங்கத்துக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த போதிலும், அவை நடைமுறையில் சாத்தியப்படவில்லை.
ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா வேறு எந்த கட்சிகளின் ஆதரவும் தமக்கு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கோரினாலும் ஆதரவளிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பதை ரில்வின் சில்வாவிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். பொய் கூறி மக்களை ஏமாற்றும் உங்களுடன் இணைய வேண்டிய தேவைய எமக்கில்லை. ஆனால் கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கு நாம் தயார் என்றார்.
இதனிடையே, நேற்றையதினம் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது குறித்து எதிரணிகள் ஒன்றுகூடி பேச்சு நடத்தியிருந்தது. இதன்போது, பலதரப்பட்ட விடயங்களும் ஆராயப்பட்டதாக தெரியவருகிறது.
Vidivelli
No comments:
Post a Comment