இன்று (05) காலை கல்கிஸ்ஸை கடற்கரை வீதிக்கு திரும்பும் கொழும்பு - காலி சந்தியில் இளைஞன் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், உள் வீதியொன்றில் வீதியோரத்தை துப்புரவு செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முனைந்த வேளையில், அது வெற்றியளிக்கவில்லை.
சுதாரித்துக் கொண்ட குறித்த இளைஞர் அங்கிருந்து பிரதான வீதிக்கு ஓடி வந்த நிலையில், பின்னால் துரத்தி வந்த குறித்த இருவரும் ஒரு கட்டத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று (05) காலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் களுபோவில போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மரணித்த இளைஞன் தெஹிவளை, ஓபன் பிளேஸ் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞனின் தாய் தற்போது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பதாகவும், உயிரிழந்த இளைஞன் 2023 ஆம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் போதைப் பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவின் உறவினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment