ஒருநாள் போட்டிகளில் 'இரு பந்து' விதியில் மாற்றம் : பரிசீலிக்கும் ICC - News View

About Us

About Us

Breaking

Thursday, April 17, 2025

ஒருநாள் போட்டிகளில் 'இரு பந்து' விதியில் மாற்றம் : பரிசீலிக்கும் ICC

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் இரு புதிய பந்து விதியை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) பரிசீலித்து வருகின்றது.

இந்திய முன்னாள் அணித் தலைவர் சௌரவ் கங்குலி தலைமையிலான ஐ.சி.சி. கிரிக்கெட் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரையிலேயே ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் ஒரு வெள்ளை பந்தை மாத்திரம் பயன்படுத்தும் முறைக்கு திரும்புவதற்கு கோரப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சமநிலையை பேணவே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் இரு கூக்கபுரா வெள்ளை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி இரு முனைகளிலும் ​வெவ்வேறு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பந்து நீண்ட நேரத்திற்கு கடினமாக இருப்பதை உறுதி செய்வதாக உள்ளது. இது துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டங்களை பெறுவதற்கு இலகுவாக அமைகிறது.

எனினும் களத்தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ஒப்பிடும்போதும் இந்த விதி பந்துவீச்சாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த இரண்டு பந்து விதி ரிவர்ஸ் சுவிங் முறையை இல்லாமல் செய்திருப்பதாக முன்னணி வீரர் சச்சின் டெண்டுல்கள் போன்றோரும் விமர்சித்துள்ளனர். 35 ஓவர்கள் பழைமையான பந்திலேயே ரிவர்ஸ் சுவிங் செய்ய முடியுமாக உள்ளது.

எனினும் தற்போதைய விதிகளின்படி ஒவ்வொரு பந்தும் தலா 25 ஓவர்களே பயன்படுத்தப்படுகின்றன. இது ரிவர்ஸ் சுவிங் வாய்ப்பை இல்லாமல் செய்வதோடு சுழற்பந்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முறையின்படி 35 ஆவது ஓவரியில் இருந்து ஒரு பந்தை மாத்திரம் பயன்படுத்துவதற்கு கோரப்பட்டுள்ளது. இதன்போது இரு பந்துகளும் 17 ஓவர்கள் பழமையனதாக இருப்பதோடு எந்தப் பந்தை தொடர்ந்து பயன்படுத்துவது என்பதை பந்துவீசும் அணி தீர்மானிக்கும். பயன்படுத்தப்படாத பந்து மேலதிக பந்தாக தொடர்ந்து வைக்கப்படும்.

இந்த பரிந்துரை தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டால் எதிர்வரும் ஜூலையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. வருடாந்த பொதுக் கூட்டத்தில் போட்டி விதிகளில் சேர்க்க வாய்ப்பு உள்ளது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இரு பந்து விதி 2011 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அமுலுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment