காசாவில் தொடர்ந்து உக்கிர தாக்குதல்களையும் அங்குள்ள பலஸ்தீனர்கள் மீது வெளியேற்ற உத்தரவுகளையும் பிறப்பித்து வரும் இஸ்ரேல், காசாவில் தனது ஆக்கிரமிப்பை அதிரடியாக அதிகரித்து கடந்த மாதம் தொடக்கம் அந்த குறுகிய நிலப்பகுதியின் 50 வீதமான பகுதியை ஆக்கிரமித்திருப்பதாக இஸ்ரேலிய உரிமைக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேலியப்படை கடந்த மாதம் மீண்டும் போரை ஆரம்பித்ததை அடுத்து யுத்த சூன்ய பகுதியை 3 கிலோ மீற்றராக அதிகரித்து இரட்டிப்பாக்கி இருப்பதாக இஸ்ரேல் வெளியிட்ட வரைபடத்தை மேற்கோள்காட்டி பி.டீ.எஸ் என்று இஸ்ரேலிய உரிமைக்குழு குறிப்பிட்டுள்ளது.
யுத்த சூன்ய வலயம் மற்றும் நட்சரிம் தாழ்வாரம் காசாவின் 50 வீத நிலப்பகுதியை ஆக்கிமிரத்திருப்பதாகவும் அந்தக் குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு காசாவின் ரபா நகரை மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கும் வகையில் காசாவில் மற்றொரு தாழ்வாரம் ஒன்றை அமைக்க திட்டமிடுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
இதில் காசாவில் தாக்குதல்களுக்கு முன்னதாக மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதிகளை கணக்கில் கொண்டால் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி இதனை விட அதிகம் என கூறப்படுகிறது. கடைசியாக மத்திய டெயிர் அல் பலாவில் உள்ள ஐந்து பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டிருந்தது.
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டு மேலும் 137 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை இரு பிரதான வைத்தியசாலைகளுக்கு வெளியே மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் ஆறு செய்தியாளர்கள் இருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் கான் யூனிஸ் நகரின் நாசர் வைத்தியசாலைக்கு வெளியே இருக்கும் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தின் மீது நேற்று அதிகாலை 2 மணி அளவில் நடத்திய தாக்குதலில் ‘பலஸ்தீன் டுடே’ செய்தி இணையதளத்தின் செய்தியாளர் யூசுப் அல் பகாவி என்பவரே கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஆறு செய்தியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
அதேபோன்று மத்திய நகரான டெயிர் அல் பலாவில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் வைத்தியசாலையின் விளிம்பில் உள்ள கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
தவிர, இஸ்ரேலியப் போர் விமானங்கள் டெயிர் அல் பலாவில் இருக்கும் இரு வீடுகள் மீது நடத்திய தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு காசா நகரின் செய்தூன் பகுதியில் நடத்திய தாக்குதல் ஒன்றில் மேலும் மூவர் கொல்லப்பட்டதாகவும் பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
காசாவில் கடந்த 2023 ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 50,752 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 115,475 பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தத்தின் பின்னர் கடந்த மார்ச் 18 ஆம் திகதி இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,391 ஆக அதிகரித்திருப்பதோடு 3,434 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் படுகொலைகளுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் தெற்கு நகர் மீது கடந்த ஞாயிறு இரவு ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 10 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டிருந்ததாகவும் அவற்றில் பெரும்பாலானவை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் தெற்கு நகரான அஸ்கெலோனில் நேரடி தாக்குதல் ஒன்று இடம்பெற்றதாக இஸ்ரேலின் ‘செனல் 12’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதில் ரொக்கெட் குண்டின் கூரிய பொருள் தாக்கி ஒருவர் சிகிச்சை பெற்றதாக இஸ்ரேலிய அவசர சேவை தெரிவித்துள்ளது. அதேபோன்ற கார் வண்டியின் கண்ணாடி ஜன்னல் ஒன்று உடைந்திருப்பது, ரொக்கெட் பாகங்கள் வீதிகளில் சிதறி இருக்கும் படங்களையும் இஸ்ரேலிய அவசர சேவை வெளியிட்டுள்ளது.
காசாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இஸ்ரேல் தீவிர படை நடவடிக்கையை முன்னெடுத்து வந்தபோதும் பலஸ்தீன போராளிகள் நடத்தும் ரொக்கெட் தாக்குதல்களை அதனால் தடுக்க முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசாவுக்கு அப்பாலும் பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடிப்பதோடு குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படை நடவடிக்கை தொடந்து இடம்பெற்று வருகிறது. இதில் ரமல்லாவின் வட கிழக்கே துர்முஸ் சிறு நகரில் இஸ்ரேலியப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க குடியுரிமை பெற்ற 14 வயது பலஸ்தீன சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். அதேபோன்று தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் மேலும் இருவர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை யெமன் மீது இஸ்ரேல் நடத்தி இருக்கும் புதிய வான் தாக்குதல்களில் சனா நகரில் நால்வர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் நான்கு பெண்கள் மற்றும் சிறுவர் உட்பட 20இற்கு மேற்பட்டவர்கள் கயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தலைநகரின் மேற்காக அமெரிக்க போர் விமானங்கள் மூன்று வான் தாக்குதல்களை நடத்தியதாக யெமனின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஹூத்திக்களின் கோட்டையாக கருதப்படும் சானா மீது இடம்பெற்ற தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக அந்த கிளர்ச்சியாளர்கள் கூறியிருந்தனர்.
தாக்குதல் ஒன்றில் இரு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஒன்றை ஹூத்திக்களின் அல் மசிரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக செங்கடலில் செல்லும் கப்பல்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்ததை அடுத்தே அமெரிக்கா யெமன் மீது தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment