(நா.தனுஜா)
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக செயற்படுவது என்பது நாட்டுக்கு இழைக்கின்ற துரோகமாகாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஆட்சியியல் நிர்வாகம் என்பன உள்ளடங்கலாகப் பல்வேற விடயங்கள் தொடர்பான 27 சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும்.
அதன்படி கடந்த 2022 - 2024 வரையான காலப்பகுதியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையினால் இணங்கப்பட்ட கடப்பாடுகள் உரியவாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து மதிப்பீடு செய்வதற்காக இவ்வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் அதன் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தினால் நாட்டுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு எவ்வித அரசியல் வேறுபாடுகளுமின்றி சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வரிச் சலுகை வழங்கல் குறித்த மீளாய்வுக்காக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஆகிய விடயங்களில் அரசாங்கம் நம்பத்தகுந்த முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டமானது தவறான முறையில் பிரயோகிக்கப்படுவதாகவும், அதனூடாக அத்துமீறல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள குழு பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்து வருகிறது. அக்குழுவின் பரிந்துரைகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இவ்விடயம் தொடர்பில் பரந்துபட்டதும், சகலரையும் உள்ளடக்கியதுமான பொதுக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று 2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நிகழ்நிலைக்காப்பு சட்டமும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்கள் இலங்கையின் நன்மதிப்பை மேலும் சிதைத்தது. இவ்வாறான கரிசனைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது அரசியல் தன்முனைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன பேணப்படுவது அவசியமாகும்.
அதேபோன்று தேர்தல் பிரசாரத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வாக்குறுதியளிக்கப்பட்டமைக்கு அமைவாக புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்படும் என வடக்கு, கிழக்கு மக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இவ்விடயத்தில் அநேகமான நடவடிக்கைகள் எட்டாவது பாராளுமன்றத்திலேயே பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன. குறுகிய காலத்தில் அடையப்படக்கூடிய விடயங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. எனவே தற்போது இதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான திட்டமும், தெளிவான காலவரையறையுமே அவசியமானதாக இருக்கின்றன. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment