மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22) இரவு ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று (23) காலை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரை 250 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றிரவு 8.00 மணியளவில் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலைக்குள் அமைதியற்ற வகையில் செயற்பட்டதை அடுத்து இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, சிறைச்சாலையின் உயர் பாதுகாப்பு சிறைகளில் இருந்த கைதிகள் சிறை அதிகாரிகளை கற்களால் தாக்கியுள்ளனர்.
கலவர நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், நள்ளிரவில் கைதிகள் மீண்டும் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டு சிறைச்சாலைக்குள் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கத் தொடங்கியுள்ளனர். சிறைச்சாலையைப் பாதுகாக்க கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளதோடு வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த அமைதியின்மையால் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்து மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் மங்கள வெலிவிட்ட தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், சிறையில் இருந்த 25 பெண் கைதிகளின் பாதுகாப்பு கருதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (23) அதிகாலை சிறைச்சாலைக்குள் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும், சிறைச்சாலைக்குள் இருந்த களஞ்சிய அறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நிலைமையைக் கட்டுப்படுத்த, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து மேலதிக பொலிஸ் குழுக்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுதோடு, சிறைச்சாலையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவங்களில எந்தவொரு கைதியும் காயமடையவோ, மரணமடையவோ இல்லை என, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் கைதிகளின் உறவினர்கள் கவலையட வேண்டிய அவசியமில்லையென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment