இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் : தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும்போது ஜனாதிபதி குழப்பமடைந்துள்ளார் - முஜிபுர் ரஹ்மான் சாடல் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 17, 2025

இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் : தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும்போது ஜனாதிபதி குழப்பமடைந்துள்ளார் - முஜிபுர் ரஹ்மான் சாடல்

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது. இந்த அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கிழக்கு மாகாணங்களில் அரசியல் கூட்டங்களுக்கு செல்லும்போது சற்று கலவரமடைகின்றார். பலஸ்தீனுக்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒட்டியமை தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இளைஞர் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்பற்றவர் என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். ஆனால் அதற்கு முரணான கருத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

எனினும் அந்த இளைஞன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு பயங்கரவாத செயற்பாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லை எனில் எதற்காக வாராந்தம் குற்றத் தடுப்பு பிரிவில் கையெழுத்திடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது?

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது. ஆனால் அக்கறைப்பற்று போன்ற பிரதேசங்களில் வீசா இன்றி இஸ்ரேலியர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து இந்த அரசாங்கத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொழும்பில் சட்ட விரோதமாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா? ஜனாதிபதியின் கூற்றுப்படி பலஸ்தீனுக்கு ஆதரவாக செயற்படுவது மாத்திரமே தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

6 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதியின் மாற்றங்கள் ஆச்சரியமளிக்கின்றன. பலஸ்தீன் என்ற பெயரைக் கூட உச்சரிக்க மறுக்குமளவுக்கு ஜனாதிபதி மாறியிருக்கின்றார்.

இந்த அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருக்கின்றார். ஆனால் அந்த குழு பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதேயன்றி அதனை நீக்குவதற்காக அல்ல. பொய் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment