இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் அளித்த தகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக 15 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் யோகநாதன் ரொஸ்மன் மற்றும் கௌதீகரன் பிரதீபன் ஆகிய இருவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மகாவலி அதிகார சபையின் B வலயத்தில் உள்ள குளங்களிலிருந்து பெறப்பட்ட மணலை பிரித்தெடுப்பதற்காக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தால் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காகவே இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment