இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு மட்டக்குளியில் உள்ள கோவிலொன்றுக்கு அருகில் 21 வயது இளைஞனை அடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட கால விசாரணைக்குப் பின்னர் இன்று (28) குறித்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, குற்றம் நடந்தபோது 18 வயதுக்கு குறைந்தவர்களாக இருந்த, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.
மட்டக்குளிய, தொட்டுபொல வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், பிரான்சிஸ் சுரஞ்சன் குறூஸ் எனும் 21 வயதான இளைஞரை விக்கெட் பொல்லுகள் மற்றும் கம்புகளால் தாக்கி கொலை செய்தமை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மதம் 26ஆம் திகதி கொலை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களை சுமத்தி, சட்டமா அதிபரினால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணையின் பின்னர், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக நீதவான் தனது தீர்ப்பில் அறிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் தந்தை மற்றும் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 2 நபர்கள் விசாரணைக் காலப்பகுதியில் மரணமடைந்துவிட்டதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment