உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு உண்மையான நீதியை வழங்க வேண்டும் என்றால் நாட்டில் புற்றுநோய் போன்று பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாத சக்திகளை முற்றாக தோற்கடிக்க வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கம் அவ்வறான திட்டம் எதனையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக பல மேடைகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், இதுவரை அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதத்துடன் 1990 முதல் தொடர்புகளை பேணிவந்த குழுக்கள், இதற்காக பயிற்சி எடுத்தவர்கள், இந்த நோக்கத்திற்காக இளைஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்பியவர்கள் என அனைவரும், வெட்கமற்று இந்த அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்துள்ளனர் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 11ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி குறித்த விபரங்களை வெளியிடுவேன் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ள ஞானசார தேரர், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நுவரேலியாவில் ஆற்றிய உரைகளில் ஜனாதிபதி நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை என குறிப்பிட்டிருந்தார் என தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி இனவாதம் என குறிப்பிடுவது எதனை ஜனாதிபதி இனவாதம் மற்றும் மத அடையாளம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல்மயப்படுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள ஞானசார தேரர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல்மயப்படுத்தினால் அது உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்கு உதவலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment