இந்த அரசாங்க காலத்திலும் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் கிழக்கு மாகாண சபை அசமந்த நிலையிலேயே பயணித்து வருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, கிழக்கு மாகாண சபை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு பொதுமக்களால் அனுப்பப்படும் கடிதங்களில் பெரும்பாலானவற்றுக்கு பதில் அனுப்பப்படுவதில்லை. அவற்றுக்கான நடவடிக்கைகளும் கூட வாரக்கணக்கில் மாதக் கணக்கில் எனத் தாமதப்படுத்தப்படுகின்றன. சில விடயங்கள் எவ்வித நடவடிக்கையுமின்றி கிடப்பில் போடப்படுகின்றன.
கடந்த அரசாங்க காலத்தில் கிழக்கு மாகாண சபை எப்படி செயற்பட்டதோ அதே பாணியிலேயே இன்றும் பயணிக்கிறது. இந்த அரசாங்கம் அரச சேவையை வினைத்திறனுள்ளதாக்குவோம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக்குவோம் என்று பேசிக் கொண்டாலும் எந்த மாற்றத்தையும் கிழக்கு மாகாண சபையில் அவதானிக்க முடியவில்லை.
மக்கள் பிரதிநிதியாகிய நான் கிழக்கு மாகாண சபை அமைச்சுக்கள் திணைக்களங்களுக்கு பொதுமக்களது பிரச்சினைகள் தொடர்பாக கடிதங்கள் அனுப்பியுள்ளேன். சில அலுவலகங்களுக்கு நேரில் சென்று விளக்கமளித்து கடிதங்கள் கையளித்துள்ளேன். எனது கடிதங்களுக்கே பதில் கிடைப்பதில்லை. அப்படியாயின் பொதுமக்கள் அனுப்பும் கடிதங்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு பொதுமக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை அவர் சம்பந்தப்பட்ட அமைச்சு திணைக்களங்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்புகிறார் அவை கூட கிடப்பில் போடப்படுகின்றன.
நான் ஆளுநரது கவனத்திற்கு சில விடயங்களை முன்வைத்தேன். அவர் குறித்த அமைச்சுக்கள் திணைக்களங்களுக்கு அவற்றை முன்னிலைப்படுத்தி தேவையான நடவடிக்கை எடுத்து இரு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் பிரதி எனக்கும் கிடைத்தது. சுமார் 2 மாதங்களாகியும் அவற்றுக்கான பதில் எனக்கு கிடைக்கவில்லை. உரிய விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.
ஆளுநரது கடிதத்தையே இந்த அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிழக்கு மாகாண அரச அலுவலகங்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. இது குறித்த நான் மிகவும் கவலையடைகின்றேன்.
No comments:
Post a Comment