மதங்களை விமர்சித்து அர்ச்சுனா சபையில் உரையாற்ற இடமளிக்கக்கூடாது : யூடியூப் ஊடாக டொலர் உழைக்க பல வழிகள் உண்டு என்கிறார் மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 15, 2025

மதங்களை விமர்சித்து அர்ச்சுனா சபையில் உரையாற்ற இடமளிக்கக்கூடாது : யூடியூப் ஊடாக டொலர் உழைக்க பல வழிகள் உண்டு என்கிறார் மரிக்கார்

அர்ச்சுனா எம்.பி. யூடியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு பிற மதங்களை விமர்சித்து வருவதுடன். அதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார் என்றும் அலருக்கு உரையாற்ற இடமளிக்க வேண்டாமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. எஸ்.எம். மரிக்கார் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ”அர்ச்சுனா எம்.பி. இஸ்லாமிய மதத்தை பற்றி குறிப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சிறந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். இன்றும் இருக்கிறார்கள். எவரும் தமது பிரபல்யத்துக்காக பிற மதங்களை பற்றி இவ்வாறு பேசியதில்லை. தமது உரிமைகள் மற்றும் தமது மக்களுக்காக பேசினார்கள், பேசுகிறார்கள்.

ஆனால் அர்ச்சுனா எம்.பி. யூடியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். 12 வயதுடைய முஸ்லிம் சிறுமிகள் எங்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள் என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா?

தேசவழமை சட்டம் தொடர்பில் நாங்கள் பேசுவதில்லை. ஆகவே, மதங்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும்போது அதனை சாட்சிகள் ஊடாக அவர் நிரூபிக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவதாகவும் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிடுகிறார்.

இஸ்லாமிய மதத்தில் பெண்களுக்கு கௌரவமான உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, தெரியாத விடயங்களை பற்றி பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அர்ச்சுனா எம்.பி.க்கு டிக்டொக், யூடியூப் ஊடாக டொலர் உழைக்க வேண்டுமானால் அதற்கு பல வழிகள் உண்டு. சுற்றுலாத்துறை அமைச்சில் ஏதேனும் வாய்ப்பினை பெற்றுக்கொண்டு யூடியூப் காணொளிகளை பதிவிடலாம். அவருக்கு அனுமதி வழங்குமாறும் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். இதனை விடுத்து பாராளுமன்றத்துக்கு வந்து மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்க வேண்டாம்” என்று அவரைக் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment