காசா உதவிகளை முடக்கிய இஸ்ரேல் : அரபு நாடுகள் கண்டனம் : பட்டினி அச்சம், தாக்குதல்களும் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

காசா உதவிகளை முடக்கிய இஸ்ரேல் : அரபு நாடுகள் கண்டனம் : பட்டினி அச்சம், தாக்குதல்களும் அதிகரிப்பு

காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முடக்கி இருக்கும் நிலையில் புனித ரமலானுக்கு மத்தியில் அங்கு பட்டினி அச்சம் அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரபு நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

காசாவில் கடந்த ஆறு வாரங்களாக நீடித்த முதல் கட்ட போர் நிறுத்தம் கடந்த சனிக்கிழமையுடன் முடிவுற்ற நிலையில் போர் பதற்றம் அதிகரித்திருப்பதோடு காசாவில் இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதல்களில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம் இஸ்ரேலின் ஹைபா நகர பஸ் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் காசாவுக்கான உதவிகளை முடக்கி இருக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை போர் நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் என்று எகிப்து மற்றும் கட்டார் குறிப்பிட்டிருப்பதோடு ஐ.நா. மனிதாபிமான தலைவர் டொம் பிளட்சர், இது ‘அபாயகரமானது’ என்று வர்ணித்துள்ளார்.

காசாவுக்கான விநியோகங்களை ஹமாஸ் திருடுவதாகவும் அதன் பயங்கரவாத செயற்பாட்டுக்கு பயன்படுத்துவதன் காரணமாகவும் இந்த நடவடிக்கையை எடுத்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். அதேபோன்று காசா போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஹமாஸ் மறுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எனினும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ‘மலிவான மிரட்டல்’ என்று குறிப்பிட்ட ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான சதி வேலை என்றும் சாடினர்.

15 மாதங்களுக்கு மேல் நீடித்த போரை அடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் திகதி எட்டப்பட்ட போர் நிறுத்தத்தில் 33 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்த நிலையில் அதற்கு பகரமாக சுமார் 1,900 பலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் கட்டார் வெளியுறவு அமைச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேலின் முடிவை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்ததோடு, அது போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தெளிவாக மீறுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டது. 

பட்டினியை பலஸ்தீன மக்களுக்கு எதிரான ஆயுதம் ஒன்றாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது என்று எகிப்து வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசா போர் நிறுத்தத்தில் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்த பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முடக்கி இருப்பதை சவூதி அரேபியா கண்டித்திருப்பதோடு கண்டனத்தை வெளியிட்டுள்ளது. ‘காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை நிறுத்தும் இஸ்ரேலின் முடிவு மிரட்டல் மற்றும் கூட்டுத் தண்டனைக்கான அயுதமாக உள்ளது. இது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதோடு சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் விதிகளை நேரடியாக மீறுவதாக உள்ளது’ என்று சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணை பொதுச் செயலாளர் டொம் பிளட்சர், எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘சர்வதேச மனிதாபிமான சட்டம் தெளிவாக உள்ளது: தீர்க்கமான உயிர்காப்பு உதவிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் எட்டப்பட்ட போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் எஞ்சிய இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு, காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ் பெறப்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட வேண்டி உள்ளது. எனினும் அதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்காத சூழலில் முதல் கட்ட போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல் வலியுத்தி வருகிறது.

இந்நிலையில் போர் நிறுத்தம் காலாவதியான சூழலில் வன்முறைகளும் அதிகரித்துள்ளன. தெற்கு காசா நகரான ரபாவில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நேற்று நடத்திய தாக்குதலில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

காசாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இஸ்ரேலிய படை தாக்குதல்களை நடத்தி இருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. கான் யூனிஸ் நகரில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் தாக்குதல் ஒன்றில் நேற்று மேலும் மூன்று பொதுமக்கள் காயமடைந்ததாக வபா கூறியது.

மறுபுறம் வடக்கு காசாவில் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் உக்கிர சூடு நடத்தி இருப்பதோடு இஸ்ரேலிய கடற்படையும் கான் யூனிஸ் கடற்கரையில் தாக்குதல் நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இஸ்ரேலின் ஹைபா நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்போது தாக்குதல்தாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment