விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோன் வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைத்துள்ள கோரிக்கைக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
விளக்கமறியலில் இருக்கும்போது அவருக்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் காமினி பீ.திசாநாயக்க ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க ஒரு நாளில் 3 வேளை உணவையும் அவருக்காக வெளியிலிருந்து கொண்டு வருவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதி ஒருவருக்கு ஒரு தினத்திற்கு மூன்று வேளை உணவுக்காக அரசாங்கம் ரூ. 500 ரூபா நிதியை செலவிடுகின்றது. அதற்கிணங்க கடந்த 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை 13 தினங்களுக்கான உணவுக்கு அவருக்காக சிறைச்சாலைகள் திணைக்களம் செலவிடும் பணம் மீதியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி சிறைச்சாலை கைதிகளுக்கு உணவு வழங்கும் நேரத்திலேயே அவருக்கும் உணவு கொண்டு வரப்படவேண்டுமென்றும் அந்த உணவு அதிகாரிகளின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 20 நாட்களுக்குப் பின்னர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதன் பின்னர், ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, தற்போது அவர் தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment