(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைத்துள்ள அரசியல் கைதிகளை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயர்களை பட்டியலிட்டு மேலதிக விபரங்களை நீதி அமைச்சரிடம் கோரினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை 27 / 2 இன் கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழ் இளைஞர்கள் பலர் இலங்கை சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடனும் கவலையுடனும் இவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றனர். தாயை இழந்த நிலையில் தந்தை பல ஆண்டுகளாக சிறையில் இருக்க தாய், தந்தை இருவரின் அரவணைப்பின்றி பல பிள்ளைகள் தமது பெற்றோரின் விடுதலைக்காக தவமிருக்கின்றனர்.
இந்த நாட்டில் இன ஒற்றுமை, மாற்றம் வேண்டிய புதிய சிந்தனை, சுத்தமான இலங்கை என்ற மகுட வாசகங்களுள் சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற மகுட வாசகத்தை மனதில் வைத்தாவது பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அவர்களின் உறவினர்கள் நீண்ட காலமாக எங்களிடம் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சில கேள்விகளை அமைச்சரிடம் எழுப்புகின்றேன். அதாவது தற்போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்? தமிழ் அரசியல் கைதிகள் எந்தெந்த சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? இவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்? மனிதாபிமான அடிப்படையிலோ, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பிலோ இவர்களை விடுதலை செய்ய முடியுமா? என்றார்.
இதன்போது எழுந்து பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இது முக்கியமான கேள்வியாகும். இதற்கு நான் பதிலளிக்க வேண்டும். ஆனால் அமைச்சு மீதான விவாதம் நடக்கவுள்ளதால் அது தொடர்பான நடவடிக்கைகளில் இருந்தமையினால் இன்று பதிலளிக்க முடியாதுள்ளது. இதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்குங்கள் நான் அப்போது முழுமையான பதிலை வழங்குகின்றேன் என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய சிறிதரன், அமைச்சரின் கோரிக்கையை ஏற்கின்றேன். நான் முன்வைத்த விடயங்களுக்கு, மேலதிகமாக சில விடயங்களை சேர்க்க விரும்புகின்றேன். அதாவது கதிர்காமத்தம்பி சிவகுமார், விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், கிருஷ்ணசாமி ராமசந்திரன், சண்முகலிங்கம் சூரியகுமார், ஜோன்ஷன் கொலின் வெலன்டினோ, சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், ஏ.எச்.உமர் ஹதாப், தங்கவேலு நிமலன், செல்வராஜா கிருபாகரன், தம்பிஐயா பிரகாஸ் ஆகியோரில் இரண்டு பேர் 30 வருடங்களாகவும், மூவர் 17 வருடங்களும், ஒருவர் 22 வருடங்களாகவும் மற்றும் நான்கு பேர் 16 வருடங்களாக சிறையில் வாழ்கிறார்கள்.
இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இவர்களின் விடுதலை தொடர்பில் அதிக கரிசனை செலுத்தி உங்கள் விடையை வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
இதனை தொடர்ந்து பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், அந்த பெயர்களை இன்றைய தினத்தில் எனக்கு கிடைக்கச் செய்யுங்கள். அந்தப் பெயர்கள் கிடைத்தால் அது தொடர்பில் விசேட கவனத்தை செலுத்துகின்றேன். அதன்படி நான் பதிலளிக்கின்றேன் என்றார்.
இவ்வேளையில் மீண்டும் உரையாற்றிய சிறிதரன் , நீண்ட காலமாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் பட்டியலையும் குரலற்றோரின் குரல் அமைப்பு வெளியிட்ட கடிதத்தையும் சபாபீடத்திற்கும் அமைச்சரின் கவனத்திற்காகவும் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment