உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென்பதை ரவி செனவிரத்னவிடம் கேளுங்கள் : கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Saturday, March 1, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென்பதை ரவி செனவிரத்னவிடம் கேளுங்கள் : கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - தயாசிறி ஜயசேகர

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனவிரத்ன, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக் டி சில்வாவிடன், குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியின் பெயரை ஒரு தாளில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆகவே தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென்பதை ரவி செனவிரத்னவிடம் கேளுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையில் 'வெட்கம், வெட்கம்' என்று குறிப்பிட்டிருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன்.

வீதிகளை திறந்து பாசாங்கு செய்வதை விடுத்து உண்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். பெருந்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக பேசுகிறேன். இருப்பினும் முறையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கைதிகளுக்காகவே புஸ்ஸ சிறைச்சாலை உருவாக்கப்பட்டது.

இந்த சிறைச்சாலையை அண்மித்த பகுதியில் இருந்தவாறு கைதிகளிடமிருந்து சாட்சியம் பெற்றுக் கொள்வதற்கு ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் இன்றுவரை அந்த நோக்கம் வெற்றி பெறவில்லை.

சந்தேகநபர்களை நீதிமன்றத்துக்கு கொண்டுவரும்போது அவர்கள் முன்னிலையில் செல்வதற்கு நீதிபதிகள் தற்போது அச்சமடைந்துள்ளார்கள். அவ்வாறான நிலையே காணப்படுகிறது. பொலிஸ் மீதும், சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் நம்பிக்கையில்லை. அதேபோல் நீதிமன்ற ஊழியர்கள் மீதும் நம்பிக்கையில்லை.

கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இவற்றை குறிப்பிடுகிறேன்.

1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான் பாதாளக்குழு தோற்றம் பெற்றது. பிற்பட்ட காலங்களில் இது வளர்ச்சி பெற்றது. மக்கள் விடுதலை முன்னணிதான் தமக்கு ஆயுதம் வழங்கியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பாதாளக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுங்கள். நாங்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து தற்போது பேசப்படுகிறது. குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 747 பேர் கைது செய்யப்பட்டனர். அக்காலப்பகுதியில் விசாரணைகளை சிறந்த முறையில் முன்னெடுத்த ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோர் இன்று அரசாங்கத்தின் பக்கம் உள்ளார்கள். ஆகவே உண்மையை வெகுவிரைவில் வெளிப்படுத்துங்கள்.

இராணுவ புலனாய்வு பிரிவில் எஸ்.ஐ. பண்டார என்பவரொருவர் இருக்கிறார். அவர் இதுவரையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா, அதேபோல் சொனிக், சொனிக் என்பவர் யார். குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக் டி சில்வாவிடம், குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியின் பெயரை ஒரு தாளில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆகவே தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென்பதை ரவி செனவிரத்னவிடம் கேளுங்கள்.

பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி ஹாதியா தற்போது இலங்கையில் இல்லை. இந்தியாவில் உள்ளார். அவரை நாட்டுக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள். அதேபோல் சாராவின் உடற்கூறு பரிசோதனைகளை மேற்கொண்ட உத்தியோகத்தரையும் விசாரணை செய்யுங்கள்.

குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த காலங்களில் குறிப்பிட்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆகவே முறையாக விசாரணை செய்யுங்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீரவின் படுகொலை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். மேஜர் ஜெனரால் தோரதெனிய என்பவர் இந்த படுகொலையுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்ததாக குற்றச்சாட்டப்பட்டது. ஆனால் இந்த நபர் மக்கள் விடுதலை முன்னணியின் நிகழ்வில் கலந்துகொண்டு மங்கள விளக்கேற்றியுள்ளார். தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என்றார்.

No comments:

Post a Comment