(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் சட்டம் ஒழுங்கு வீழ்ச்சியடைந்து பாதாளக் குழுக்களின் செயற்பாடு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 18 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு சிறுவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதனால் பாதாள குழுக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார கேள்வி எழுப்பினார்.
அதேநேரம் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக தெரிவித்து வந்த தேசிய மக்கள் சக்தியினர் இதுவரை அது தொடர்பில் எந்த விசாரணையும் ஆரம்பிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்வதாக தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்து, ஆட்சிக்கு அந்துள்ள அரசாங்கம், 158 நாட்கள் கடந்தும் இதுவரை அது தொடர்பில் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் விசாரணை மேற்கொண்டு கைது செய்யப்பட்ட 700 பேரை தவிர வேறு யாரையும் கைது செய்யவில்லை. அதனால் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் ஈஸ்டர் தாக்குதல் காரணமாக முஸ்லிம் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வந்தார்கள். அதேநேரம் ஆட்சியில் இருந்த எமக்கு ஆட்சி அதிகாரம் இல்லாமல் போனது. அதனால் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்ய அரசாங்கம் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபர் மற்றும் ஜனாதிபதிக்குமிடையில் முரண்பாடு இருந்து வருகிறது. பொலிஸ் நடவடிக்கைகள் சுயாதீனமாக செயற்படவே பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. பொலிஸ் இடமாற்றம் மேற்கொள்ளும்போது அதற்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்காததால், பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட முடியாமல் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம் பொலிஸ் ஆணைக்குழு பிழையான இடத்தில் இருப்பதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கிறார். பொலிஸ் அதிபரின் இந்த கூற்று எந்தளவு ஜனநாயக விரோதமான கூற்று என்பதை பார்க்க வேண்டும்.
பொலிஸ் அதிகாரிகள் 139 பேர் ஒரே தடவையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 52 பேர் பல்வேறு இடங்களுக்கு வேறு கடமைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். அதேநேரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகள் 160 பேர் அரசியல் ரீதியில் நியமிக்கப்போவதாக அறியக்கிடைக்கிறது.
பொலிஸ் சேவையை அரசியலாக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொள்கிறது. எனவே பொலிஸ் சேவையை சுயாதீனமாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் நாட்டில் மீண்டும் பாதாள குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கடந்த 2023, 2024, 2025 காலப்குதில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ஆனால் குற்றங்கள் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் அமைச்சர் தெரிவிக்கிறார். இவர்களில் யாருடைய பேச்சை நம்புவது.
நாட்டின் வரலாற்றில் பாதாள நடவடிக்கை காரணமாக முதல் தடவையாக இரண்டு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 18 பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். நாட்டில் 57 பாதாள குழுக்கள் இருப்பதாகவும் 1400 பாதாள உறுப்பினர்கள் இருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கிறார்.
எனவே பாதாள குழுக்களை அடக்குவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள குழுக்களை அடக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். ஆனால் அது எந்தளவு சாத்தியமாகுமென தெரியவில்லை.
அரிசி மாபியாவை கட்டுப்படுத்துவதாக தெரிவித்து மேசையின் மீது உரத்து தட்டிய ஜனாதிபதி, அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு 10 ரூபாவாக அதிகரித்து வழங்கினார். அதனால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் போதைப் பொருள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடல் மார்க்கமாகவே போதைப் பொருள் நாட்டுக்குள் வருகிறது. அதனால் இவற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் என்ன என கேட்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment