இலங்கை இராணுவத்துக்கொரு நீதி? இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா ? : அப்பாவி பலஸ்தீனியர்களை கொன்று குவிக்க பிரித்தானியா ஆதரவளிக்கிறது - ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, March 27, 2025

இலங்கை இராணுவத்துக்கொரு நீதி? இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா ? : அப்பாவி பலஸ்தீனியர்களை கொன்று குவிக்க பிரித்தானியா ஆதரவளிக்கிறது - ராஜித சேனாரத்ன

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு பிரித்தானியா ஆதரவளித்து வருகிறது. அவ்வாறெனில் இலங்கை இராணுவத்துக்கொரு நீதி? இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா? என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பினார்.

களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. 

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதென்றால், காசாவிலுள்ள அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பது மனித உரிமை இல்லையா என்று பிரித்தானிவிடம் கேட்கின்றேன். இஸ்ரேல் படை வீரர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

காசாவில் சுமார் 50000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்துக்காக பிரித்தானியா ஒரு பில்லியனுக்கும் அதிக உதவிகளை வழங்கியிருக்கிறது.

தமது நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்காது இஸ்ரேல் இராணுவத்துக்கு உதவிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவே இவ்வாறு எமது படையினருக்கு எதிராக தடை விதித்துள்ளது.

சிறுவர்களையும் பெண்களையும் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக விதிக்கப்படாத தடை எதற்காக இலங்கை இராணுவத்துக்கு மாத்திரம் விதிக்கப்பட வேண்டும்? பக்க சார்பாக செயற்படும் பிரித்தானிவின் செயற்பாட்டை கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment