இலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 30, 2025

இலங்கையில் நாளை நோன்புப் பெருநாள்

இலங்கையின் பல பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நாளை (31) ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1446ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (30) தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையினால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை நோன்பு பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

புனித ஷவ்வால் மாத தலைப்பிறையினை தீர்மானிக்கும் மாநாடு, ரமழான் மாதத்தின் 29ஆம் நாளான இன்று (30) மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறைக்குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் ஒரு சில இடங்களில் பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறை காணப்பட்ட விடயத்தை உறுதிப்படுத்த சில மணித்தியாலங்கள் சென்ற நிலையில் மிக நீண்ட ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் பிறைக் குழுவினால் ஏகமனதாக குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், இலங்கை வக்பு சபை, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பிறைக் குழு உறுப்பினர்கள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment