மின்சாரம் தடைபடுவதற்கும், தேங்காய் தட்டுப்பாட்டுக்கும் குரங்குகள் காரணமாம் : இவை மக்கள் ஆணையை குறைமதிப்பிற்குட்படுத்தும் பேச்சுக்கள் - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Saturday, March 29, 2025

மின்சாரம் தடைபடுவதற்கும், தேங்காய் தட்டுப்பாட்டுக்கும் குரங்குகள் காரணமாம் : இவை மக்கள் ஆணையை குறைமதிப்பிற்குட்படுத்தும் பேச்சுக்கள் - சஜித் பிரேமதாச

இந்நாட்டு மக்கள் தமது ஆணையால் ஜனாதிபதியை நியமித்தும், 2/3 பாராளுமன்ற அதிகாரத்தையும் வழங்கி தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் பதிலையும் எதிர்பார்த்தாலும், இந்த அரசாங்கம் எந்த வேலையும் செய்ய முடியாமல் பொய், தவறாக வழிநடத்துதல், ஏமாற்றுதல், பிரச்சினைகளைத் தவிர்ப்பது போன்றவற்றைத் தொடர்ந்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், மின்சாரம் தடைபடுவதற்கும், தேங்காய் தட்டுப்பாட்டுக்கும் குரங்குகள் காரணமாம். நாய்களே சோறு உண்பதும், நாட்டு மக்கள் தோங்காய் சம்பலையும், சோற்றையும் அதிகமாக உண்பதுமே அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என தெரிவித்திருக்கின்றனர். உணவும் இந்த அரசாங்கத்திற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இவை பொறுப்பற்ற பேச்சுக்கள் ஆகும். இவை மக்கள் ஆணையை குறைமதிப்பிற்குட்படுத்தும் பேச்சுக்கள்.

”இவ்வாறு பொறுப்பற்ற சில்லறத்தனமான பதில்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். 3 வேளை போக, ஒரு வேளையும் சாப்பிட முடியாத மக்களும் காணப்படுகின்றனர்.

இது தவிர உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பொருட்களுக்கு மேலும் வரிக்கு மேல் வரி அறவிடுகின்றனர். மறுபுறத்தில் வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றி வருகின்றனர்.

மேலும், கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க அபிவிருத்தி உத்தியோகத்தகர்கள் கடமையில் ஈடுபட்டனர். கல்வி அமைச்சுக்கு முன்பாக இவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, அவர்கள் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களின் ஸ்தாபகர்களாக இருந்த தற்போதைய ஆளுந்தரப்பினர் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றை தடை செய்ய முற்பட்டு வருகின்றனர். ஜனநாயக உரிமைகளுக்காக குரல் எழுப்பியதும் இப்போது தவறாக பார்க்கப்படுகின்றது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

No comments:

Post a Comment