முல்லை மாவட்ட சுகாதாரத்துறை குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டு தீர்க்க நடவடிக்கை மேற்கொள்க : ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 6, 2025

முல்லை மாவட்ட சுகாதாரத்துறை குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டு தீர்க்க நடவடிக்கை மேற்கொள்க : ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் காணப்படும் குறைபாடுகளை நேரடியாக வருகைதந்து பார்வையிடுவதுடன், அந்தக் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் சுகாதாரத்துறை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையொன்று 06.03.2025 ஆம் திகதி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் முன்மொழியப்பட்டது.

இந்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரரேணையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையை முன்மொழிந்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சுகாதார அமைச்சர் அவர்களே, சுகாதார பிரதியமைச்சர் அவர்களே, முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரத் தேவைகள் ஏற்கனவே உங்களிடம் சமர்ப்பித்துள்ளோம். நீங்கள் கவனம் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எம்மிடம் தாராளமாக உண்டு.

வைத்தியர்கள் உட்பட சகலதுறைகளிலும் ஆளணிப் பற்றிக்குறை உள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கட்டட வசதி மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. நோயாளர்கள் தங்கிச் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

நோயாளர் காவு வண்டிகளின் தேவை முல்லைத்தீவு, அளம்பில், கொக்கிளாய் உட்பட சில இடங்களுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றது.

அமைச்சர் அவர்களே முல்லைத்தீவு மிகவும் பின்தங்கிய மாவட்டம். நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என நம்புகின்றோம். தயவு செய்து நீங்கள் முல்லைத்தீவிற்கு வாருங்கள். சுகாதாரத்துறை குறைபாடுகளை நேரடியாக பாருங்கள் என்றார்.

No comments:

Post a Comment