(எம்.மனோசித்ரா)
தேசிய சுதந்திரம் முன்னணி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும். எந்த தரப்பினருடனும் கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை எவ்வித பேச்சு வார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த காலம் குறித்து எழுத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவுக்காக முற்பதிவு செய்யப்பட்ட மண்டபத்தை தற்போது வழங்க முடியாது என அறிவித்துள்ளனர். அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து பிரயோகிக்கப்பட்ட அழுத்தமே இதற்கு காரணமாகும்.
புதன்கிழமை (05) தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தனித்து கட்சி ரீதியாக குறிப்பிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட எதிர்பார்த்துள்ளோம். நாம் எமது அரசியல் பயணங்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை.
மார்ச் 7ஆம் திகதி எனது பிறந்தநாளை முன்னிட்டு எழுதிய நூல் வெளியீட்டு விழாவை அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கேட்போர் கூடம் ஒன்றில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தேன். அந்த கேட்போர் கூடத்துக்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அதனை எமது நூல் வெளியீட்டுக்கு வழங்க முடியாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் பின்னணியில் அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சியே காணப்படுகின்றது. எனது நூலில் அவர்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலே இவ்வாறு எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு நீதிமன்றத்தை நாடவும் எதிர்பார்த்துள்ளோம்.
அந்த கேட்போர் கூடத்தில் நிர்வாக அதிகாரிகளால் மறுக்க முடியாத இடத்திலிருந்து இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1980 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் செயல்பாடுகள் குறித்த உண்மைகள் எனது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கு அஞ்சியே இந்த அரசாங்கம் அந்த கேட்போர் கூடத்தை வழங்க மறுத்துள்ளது.
இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கூட நாம் அரசு கேட்போர் கூடங்களை பயன்படுத்தி இருக்கின்றோம். அவ்வாறு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எமக்கு தடை விதிக்கப்படவில்லை அரசாங்கங்கள் இவ்வாறு அச்சத்துடன் செயல்படவும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment