ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இ.போ.சபை பஸ்ஸில் பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இ.போ.ச பஸ் நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும்வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாவலபிட்டியில் இருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பாடசாலை மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேறுமாறு பஸ் நடத்துனர் கோரிவந்த சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றது
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட கினிகத்தனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களையே இந்த பஸ் நடத்துனர் பஸ்ஸிலிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு என இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச்சீட்டினை பஸ் நடத்துனரிடம் காண்பிக்கும்போது பருவச்சீட்டினை வைத்திருக்கும் மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேறுமாறு நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மாணவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
நாவலபிட்டியில் இருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் இ.போ.ச பஸ்ஸில் அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது பஸ் நடத்துனரின் சொந்த பஸ் அல்ல; பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் கொடுத்து பருவச்சீட்டினை பெற்றுள்ளோம். எமக்கு பஸ்ஸை விட்டு வெளியேற முடியாது என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த பஸ்நடத்துனர் ஆம் இது என்னுடைய பஸ். நீங்கள் எல்லாம் இறங்குமாறு வலியுறுத்தியமை வெளியிடப்பட்ட கணொளி ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக காணொளியினை மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ந்தும் இது போன்ற அநிதிகள் இடம்பெற்று வருவது தொடர்பில் ஹட்டன் போக்குவரத்து சபையின் தலைவருக்கு தொடர்பு கொண்டு இது தொடர்பாக உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஹட்டன் முகாமையாளர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.
.jpeg)
No comments:
Post a Comment