(எம்.மனோசித்ரா)
இராணுவம் உள்ளிட்ட முப்படை ஆட்சேர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எனவே இவை தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்துவதாக எவரும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இராணுவம் தொழிற்துறை நிபுணத்துவம் மிக்கதாக மாற்றப்படும். இராணுவமானது அரசுக்கு சார்பானதாக காணப்பட வேண்டுமே தவிர, ஜனாதிபதிக்கோ பாதுகாப்பு செயலாளருக்கோ பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கோ சார்பாக செயற்படக்கூடாது, தேசிய பாதுகாப்பே முப்படைகளின் பணியாகும். அதற்கான தொழிற்துறையைப் பாதுகாக்க வேண்டும்.
இராணுவத்துக்குரிய பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர் தொழிற்பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்பது முன்னரே கலந்துரையாடப்பட்ட விடயமாகும்.
சிவில் யுத்தம் நிலவியபோது இராணுவத்துக்கான ஆட்சேர்ப்புக்கான எண்ணிக்கை தற்போதைய நிலைவரத்தின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
அதற்கமைய 5 ஆண்டுகளுக்கான திட்டமிடல்களையே ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அதற்கமைய தொழிநுட்ப ரீதியான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,
மறுபுறம் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான கரிசணையும் இதில் உள்ளடங்கும். எனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் எவரும் கலவரமடையத் தேவையில்லை.
ஏதேனுமொரு பிரதேசத்தில் இராணுவ முகாம் நீக்கப்படும்போது, அல்லது பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்படும்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டு ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதற்கென குழுவொன்று உள்ளது.
விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே நாம் இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்றோம் என்பதை அவ்வாறானவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment