தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுப்பது உறுதி : முதலாளிமார்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை என்கிறார் அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Friday, March 14, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுப்பது உறுதி : முதலாளிமார்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை என்கிறார் அமைச்சர்

தோட்டத் தொழிலாளர்களின் ரூ. 1700 சம்பளம் தொடர்பில் தோட்ட முதலாளிமார்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் அதனை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என பெருந்தோட்டக் கைத்தொழில், சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சில முதலாளிமார் தனிப்பட்ட ரீதியில் அதற்கான இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளதுடன், பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (14) ஜீவன் தொண்டமான் சபையில் முன்வைத்த சில விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய சம்பளம் போதுமானதல்ல. அது அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வரவு செலவுத் திட்டத்தில் அதனை வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். அதேபோன்று தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரித்துள்ளோம். 

அந்த வகையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1700 ஆக அதிகரிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் நானும் நிதி பிரதியமைச்சர் அணில் ஜயந்தவும் இரண்டு அமைச்சுகளின் அதிகாரிகளும் இணைந்து தோட்ட நிர்வாக தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். 

அந்த மக்களுக்கு ரூ. 1700 சம்பளத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவோம். அந்த நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் உள்ளோம். 

தோட்ட முதலாளிமாருடன் நாம் நடத்தியபேச்சு வார்த்தையில் அவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

அத்துடன் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்க முடியுமானால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது முடியாத காரியமல்ல நாம் நம்புகின்றோம். 

நாம் எமது தரப்பில் அவர்களிடம் விடயங்களை முன்வைத்தபோது, அரசாங்கம் என்ற வகையில் தோட்டப்பகுதி வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்குமானால் அதேபோன்று தோட்ட வீடுகளையும் நிர்மாணித்து வழங்குவதனால் ஏகாதிபத்தியவாதிகளின் காலத்தில் தோட்டங்களை நிர்வாகித்தவர்களே வீடுகள், வீதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மேற்கொண்டனர்.

அந்த திட்டங்களை மக்களின் வரிப் பணத்திலிருந்து அரசாங்கமே மேற்கொள்ளுமானால் அதைவிட மேலதிகமாக நாம் தோட்ட நிர்வாகங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும். 

குறிப்பாக சில தோட்ட நிறுவனங்கள் தனிப்பட்ட ரீதியில் ரூ. 1700 சம்பளத்தை வழங்குவதற்கு எம்மிடம் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளன. எம்மால் அதனை வழங்க முடியும் எனினும் பொதுவான ஒரு இணக்கப்பாட்டுக்கு அனைவரும் வருவது தற்போதைய தேவையாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர். அவர்களின் ஒத்துழைப்புடன் அந்த வேலைததிட்டங்கள் முன்னெடுக்கப்படும். 

அதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமைகள் வழங்கப்படும். அரசாங்கம் அதற்காக ஒரு தொகை நிதியை ஒதுக்கியுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment