கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் புத்தளம் - பாலாவி பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பாரிய திட்டமிட்ட குற்றச் செயல்கள் கும்பலின் தலைவர் கனேமுள்ள சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமர ரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார்.
இச்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய பிரதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வேன் ஒன்றில் தப்பிச் செல்லும்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் அவர் சாட்சியமளித்துக் கொண்டிருந்தபோதே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதுடன், சட்டத்தரணி போன்று உடையணிந்து வந்திருந்த ஒரு நபர் அந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார்.
இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிரதான சந்தேகநபர் புத்தளம் பிரதேசத்தில் வைத்து இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த கனேமுள்ள சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்தார்.
சம்பவம் இடம்பெற்றபோது ஏற்பட்ட நெரிசலால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பெண்ணொருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானார்.
சந்தேகநபர் துப்பாக்கியை மறைத்து கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் புத்தகமொன்று சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புத்தகம் சட்டத்தரணிகள் அதிகம் பயன்படுத்தும் குற்றவியல் சட்டக்கோவையாகும்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் லெப்டினன்ட் தர அதிகாரி என தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவும் நாடாளுமன்றில் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனேமுள்ள சஞ்சீவவை சுட்டுக் கொல்ல, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞராக ஆண் ஒருவர் உட்பட வழக்கறிஞராக பெண் ஒருவரும் மாறு வேடமிட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் வேடமணிந்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து துப்பாக்கியை வாங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment