(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பிரதமரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) நடைபெற்ற தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனம் செய்வதற்கு பொருத்தமான முறையியலொன்றைத் தயாரித்தல் தொடர்பான தனியார் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மிக மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு நாங்கள் ரஷ்யாவுக்கு சென்று இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தோம். அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை பொறுப்பான அமைச்சர் இலங்கையர்கள் தொடர்பில் தவறான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர்.
இலங்கையர்கள் பலவந்தமான முறையில் ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இலங்கையர்களில் பெருமளவிலானோர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களின் உடல்களை இலங்கைக்கு அனுப்புவதாக ரஷ்ய அதிகாரிகள் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள். ஆனால் அவ்வாறு அவர்கள் செயற்படவில்லை.
ஆகவே ரஸ்யாவில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன்.
நீர் சுத்திகரிப்பின்போது பயன்படுத்தப்படும் குரோமியம் இராசாயன பதார்த்தத்தின் மூலக்கூறின் அளவு 10 மி.கி அதிகமாகவே காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இதனால் மனித உடலுக்கு மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துங்கள்.
நாட்டில் இன்று குழாய் நீர் பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. நீர் சுத்திகரிப்பின்போது பயன்படுத்தப்படும் குரோமியத்தின் அளவு 10 மி.கி ஆக காணப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கிரீன் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்த குரோமியத்தின் அளவு 10 மி.கி இற்கும் அதிகமாகவே காணப்படுகிறது.
10 மி.கி இற்கும் அதிகமானதாக அளவுடைய குரோமியத்தை நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும்போது மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.
No comments:
Post a Comment