நாய்களை விட்டு தமிழ் இளைஞரை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் - மனோ கணேசன் - News View

About Us

Add+Banner

Tuesday, February 18, 2025

demo-image

நாய்களை விட்டு தமிழ் இளைஞரை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் - மனோ கணேசன்

Untitled
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உடுகம ஹோமாதொல தோட்டத்தில் தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகத்தரால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு நாய்களை விட்டு துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். இதனை எம்மால் பார்த்துக் கொண்டிக்க முடியாது. தமிழ் இளைஞன் சிங்கள உத்தியோகத்தரை இவ்வாறு தாக்கியிருந்தால் கலவரம் தோற்றம் பெற்றிருக்கும். ஆகவே முறையாக விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, வட்டவல பெருந்தோட்டத்துக்குரிய உடுகம ஹோமாதொல தோட்டத்தில் காபில் பிரிவில் சேவையாற்றும் காமினி கிங்ஸ்லி என்ற தோட்ட உத்தியோகத்தர் மனிதாபிமானமற்ற வகையில் அத்தோட்ட பகுதியில் லயன் அறையில் வாழும் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இதனை இனவாத வைரஸ் என்றே குறிப்பிட வேண்டும்.

அரசாங்கத்தை நான் குறை சொல்லவில்லை. தோட்ட நிர்வாகங்களில் முறையற்ற வன்மமான செயலை குறிப்பிடுகிறேன். தமிழ் இளைஞனை நிலத்தில் வீழ்த்தி, நாய்களை கடிப்பதற்கு ஏவி விடுகிறார்கள். ஒரு தரப்பினர் சுற்றியிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். பிரச்சினை என்னவென்று தெரியாது, யார் தவறிழைத்தார்கள் என்பதும் தெரியாது. இதனை பொலிஸார் பார்க்க வேண்டும். ஒரு இளைஞனை நிலத்தில் தள்ளி நாய்களை கடிப்பதற்கு ஏவி விடுவது முற்றிலும் தவறு. இதனை என்னால் பார்க்க முடியவில்லை.

ஜனாதிபதி தனது உரையில் மலையகம் என்ற சொல்லை பயன்படுத்தினார். நான் அதற்கு ஜனாதிபதியிடம் நன்றி தெரிவித்தேன். தெற்கில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்குதான் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தெற்கு பகுதியில் பெண்களை அவமானத்துக்கு உட்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. இதனை தேடிப்பாருங்கள். ஹோமாதொல தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை செய்து நீதிமன்றத்துக்கு குற்றவாளிகளை முன்னிலைப்படுத்துங்கள். இந்த சம்பவம் தொடர்பான காணொளியை பார்த்து எனது மனைவி கண்ணீர் விட்டு அழுதார்.

நிலத்தில் தள்ளப்பட்டது தமிழ் இளைஞன், அவரை தள்ளிவிட்ட கிங்ஸ்லி என்பர் சிங்களவர் இருவரும் இலங்கையர்கள். இந்த சம்பவம் மாறி நடந்திருந்தால் கலவரம் தோற்றம் பெற்றிருக்கும். ஆகவே இச்சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை விவாதம் நடைபெறும். நாங்களே விவாதத்தை கோரியுள்ளோம். விவாதத்தை நடத்த வேண்டிய தேவை ஆளும் தரப்புக்கு கிடையாது.

வரவு செலவுத் திட்ட விவாதத்துக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவது அனைவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும், இவ்விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *