தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் : முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் - அமைச்சர் வசந்த சமரசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2025

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் : முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் - அமைச்சர் வசந்த சமரசிங்க

தனியார்த்துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும், அடிப்படைச் சம்பளம் தற்போது ரூ. 21,000 இலிருந்து ரூ. 30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, மலையக பெருந்தோட்டத்துறை மக்களின் சம்பளத்தை ரூ. 1700 ஆக அதிகரிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார்த்துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் எதிர்க்கட்சியினர் தமது அரசியல் இலாபத்துக்காக விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் நாம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், சம்பள அதிகரிப்புக்காகவும் போராடினோம். பெற்றுக் கொண்ட அனுபவங்களுக்கு அமைவாகவே சம்பள அதிகரிப்புக்கான யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

நாட்டில் பெரும்பாலானோர் தனியார் துறையில் அங்கம் வகிக்கின்றார்கள். அவர்களில் 60 வீதமானோரின் அடிப்படைச் சம்பளம் ரூ. 21 ஆயிரமாகவே காணப்படுகிறது. தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய இந்த தொகை போதுமானதாக அமையாது. 

அதனால் இவ்விடயம் தொடர்பில் தனியார்த்துறை தொழில் வழங்குநர்கள் மற்றும் முதலாளிமார்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதன் பிரதிபலனாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை ரூ. 27 ஆயிரம் ஆகவும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 30 ஆயிரம் ஆகவும் அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய தனியார்த்துறை தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். 

2024 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி மலையகத்துக்கு சென்று அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ரூ. 1700 சம்பளம் வழங்குவதாக பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குறுதியளித்தார். எனினும், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. 

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதற்கமைய, ரூ. 1700 சம்பளம் வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment