இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணியும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், கட்சியின் பாராளுமன்றக் குழு ஊடகப் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் சுமந்திரனின் நியமனத்துக்கு கட்சியின் மத்திய செயற்குழு அங்கீகாரமளித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று களுவாஞ்சிக்குடியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் அலுவலகத்தில் காலை பத்து மணிக்கு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது, நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் பிரகாரம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கான விடயம் எடுத்துக் கொள்ளப்படவிருந்தபோதும், கட்சியின் பதில் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த வைத்தியர் சத்தியலிங்கம் எம்.பி அப்பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்த நிலையில் உடனடியாக அப்பதவி வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கட்சியின் யாப்புக்கு அமைவாக, சிரேஷ்ட துணைப் பொதுச் செயலராளராக இருந்த சுமந்திரன் அப்பதவிக்கு முன்மொழியப்பட்ட நிலையில் அவரது தரப்பில் எவ்விதமான எதிர்மறையான பிரதிபலிப்புக்களும் செய்யப்படவில்லை.
எனினும், சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் அப்பதவிக்கான நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கட்சியின் மத்திய குழுவிற்கு அப்பதவியை வழங்குவதற்கான அதிகாரம் இல்லையென்ற தொனிப்பட வாதங்களை முன்வைத்தனர்.
எனினும், அவ்வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்காத நிலையில் மத்திய குழுவின் பெரும்பான்மையானவர்களின் அங்கீகாரத்துடன் சுமந்திரன் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
உள்ளுராட்சித் தேர்தல்
இதனையடுத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது. அச்சமயத்தில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பிலும், தனியாக போட்டியிடுவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், கட்சியின் மாவட்டக் குழுக்களின் தீர்மானத்துக்கு அமைவாக அந்த விடயத்தினை முன்னெடுப்பது என்றும், பொதுப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தலில் தனித்தே முகங்கொடுக்கும் என்றும் தேவையேற்படுகின்றபோது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கூட்டாட்சியை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல்களைச் செய்யும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மாவட்டக் குழுக்களின் தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகள் உட்பட புதிய வேட்பாளர்களை உள்ளீர்த்தல் ஆகிய விடயங்களை முன்னெடுப்பதற்கு கட்சியின் தலைமைக்கும், பொதுச் செயலாளருக்கும் அங்கீகாரம் அளிப்பதற்கும் மத்திய குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஒழுக்காற்று குழு நியமனங்கள்
இதனையடுத்து கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கான புதிய அங்கத்துவங்கள் வழங்கப்பட்டன. ஒழுக்காற்றுக் குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்பும் வகையில் சேயோன் மற்றும் சரவணபவன் ஆகியோருக்கு அங்கத்துவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேநேரம், கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக குருகுலராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கஜேந்திரகுமாரின் கோரிக்கை
புதிய அரசியலமைப்பு விடயத்தினை கையாள்வதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கஜேந்திரகுமாரின் எழுத்து மூலமான கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்ட நிலையில், அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எவ்விதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளாதிருக்கும் தருணத்தில் அது குறித்து பேசுவதானது அர்த்தபூர்வமானதாக இருக்காது.
ஆகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பு சம்பந்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றபோது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள விடயத்தினை கையாள்வதற்கான ஏழுவர் கொண்ட குழுவானது கட்சியின் முன்மொழிவு வரைவின் அடிப்படையில் ஏனைய தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதுவரையில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தினை புதிய அரசியலமைப்பு விடயத்தினை முன்னெடுப்பதற்கான உரிய அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்கும் என்றும் விசேடமாக பொருளாதர பிரச்சினைகளுக்க தீர்வு காண்பதாக இருந்தால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தினை இடித்துரைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்சியின் அரசியலமைப்பு விடயங்களை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட ஏழுவர் கொண்ட குழுவில் இருந்து இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி. வெளியேறியுள்ள நிலையில் அவரது வெற்றிடத்துக்காக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவையின் மரணச்சடங்கு பதாகை விவகாரம்
கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சோ சேனாதிராஜாவின் இறுதிச் சடங்கின்போது மயாணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்சியின் 18 மத்திய குழு உறுப்பினர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாகை தொடர்பில் கட்சியின் தலைவர் என்ற வகையில் சிவஞானம் முறைப்பாட்டை அளித்துள்ள நிலையில் அச்செயற்பாட்டின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான தொடர்ச்சியாக செயற்படுவதெனவும், ஏனைய உறுப்பினர்களும் தனித்தனியாகவும், கூட்டாகவும் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களுக்கும் மத்திய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேற்படி தகவல்கள் அனைத்தையும், கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரியிடம் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment