தாமதப்படுத்துவது ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் - சுட்டிக்காட்டியுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2025

தாமதப்படுத்துவது ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் - சுட்டிக்காட்டியுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

(நா.தனுஜா)

புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பது இலகுவானதொரு விடயமல்ல. இருப்பினும் ஏற்கெனவே வாக்குறுதியளிக்கப்பட்டவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்குரிய காலவரையறையொன்றை நிர்ணயித்து உரிய நகர்வுகளை ஆரம்பிக்க வேண்டும். யாப்புருவாக்க செயன்முறையை அநாவசியமாக தாமதப்படுத்துவது ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையை புதுயுகத்தை நோக்கி பயணிக்கச் செய்வதற்கு அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்வது மிக அவசியமென நாம் உறுதியாக நம்புவதுடன், இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசேட அவதானம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அதன்படி இம்முறை சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியவாறு, தேசிய மற்றும் மத ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

அதேபோன்று அரசியலைப்பு மறுசீரமைப்பு செயன்முறையானது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக கோட்பாடுகளுக்கமைவாகவும், இந்நாட்டின் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தக்கூடியதுமான விதத்தில் அமைய வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

நாட்டுக்கு பொருந்தும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பது அத்தனை இலகுவானதொரு விடயமல்ல என்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்குறுதியளிக்கப்பட்டவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்குரிய காலவரையறையொன்றை நிர்ணயித்து உரிய நகர்வுகளை ஆரம்பிக்க வேண்டும். மாறாக புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையை அநாவசியமாக தாமதப்படுத்துவது ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மாதுலுவாவே சோபித தேரரினால் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றான நாட்டுக்கு நன்மையளிக்க கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதை முன்னிறுத்தி நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயாராகவிருக்கிறோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment