இயற்கையாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்களின் சம்பிரதாயத்திற்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நீதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் அமுல்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
நீதியமைச்சின் ஆலோசனைக் கூட்டம் நீதியமைச்சர் ஹர்க்ஷன நாணயக்காரவின் தலைமையில் நேற்று (27) பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்றபோது அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவ்வாறு தெரிவித்தார்.
நீதியமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மேலும் தெரிவிக்கையில், அண்மையில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் சிரேஷ்டமானவர்கள் தகுதிப் பட்டியலில் இருக்கத்தக்கவாறு கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, நீதியரசர்களின் நியமனங்கள் சுதந்திரமாக நடைபெற வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலங்களில் நீதித்துறையில் நீதியாக செயற்படவில்லை என்பதனால்தான் மக்கள் அவர்களை புறந்தள்ளி உள்ளார்கள். புதிய மாற்றங்களை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்த நீங்களும் கடந்த ஆட்சியாளர்களைப் போல் செயற்படக்கூடாது என்றார்.
சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்
No comments:
Post a Comment