ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்தது எதுவுமில்லை : மக்களை பற்றி சிந்திப்பவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் - ஏ.சி.யஹ்யாகான் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2025

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொடுத்தது எதுவுமில்லை : மக்களை பற்றி சிந்திப்பவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் - ஏ.சி.யஹ்யாகான்

நூருல் ஹுதா உமர்

முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் தராத, காணிகளை மீட்க திராணியற்ற, கல்முனை நகர அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்து நான்காண்டுகளாக சிந்தித்து கொண்டிருந்து இப்போது அங்கிருந்து வெளியேறியிருக்கிறேன். என்னுடைய பிரதிப் பொருளாளர் பதவி அடங்களாக கட்சியின் பதவிகளை இதுவரை துறக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்பினால் என்னை நீக்கிக் கொள்ளட்டும் என ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஏ.சி.எஹியாகான் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் காங்கிரஸின் அலுவலகத்தை இன்று (23) திறந்து வைத்து விட்டு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு பேசிய அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் அமைச்சராக இருந்தும் கல்முனைக்கு எவ்வித அபிவிருத்திகளும் நடக்கவில்லை. கல்முனையை அபிவிருத்தி செய்ய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் எடுத்த எத்தனங்களை அவர்களே தடுத்தார்கள்.

கடந்த பொதுத் தேர்தலிலும் தங்களின் ஆமாம் சாமிகள் அவர் கூட தேர்தலில் களமிறங்கினால் அவர்கள் தோற்று ஹரீஸ் வென்றுவிடுவார் என்பதற்காக ஹரிஷை தேர்தலில் களமிறங்க விடாமல் சதி செய்து தடுத்தார்கள்.

இந்த முஸ்லிம் காங்கிரஸில் யாரும் மக்களை பற்றி சிந்திக்க முடியாது. அவ்வாறு சிந்தித்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். அல்லது வெளியேற்றப்படுகிறார்கள்.

கூஜா தூக்கிகளுக்கு சாமரம் வீசும் வேலையை செய்வதையே முஸ்லிம் காங்கிரஸ் தலையாய கடமையாக கொண்டுள்ளது. இதனால்தான் மக்கள் அவர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் இன்னும் பல பாரம்பரிய கட்சிகளையும் நிராகரித்து தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரண்டார்கள்.

நாங்களும் அவர்களுக்கு தேவையாயின் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம். எங்கள் தொகுதிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் எம்.பிக்கு ஆலோசனை வழங்கத் தயாராக இருக்கிறோம். எங்களுடன் ஒன்றாக இருந்த துரோகிகள் எங்களை பல இடங்களில் காட்டிக்கொடுத்து பதவிகளை பெற்றுக் கொண்டார்கள்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும் திருகோணமலை உட்பட இன்னும் சில மாவட்டங்களிலும் நாங்கள் களமிறங்க தயாராகி வருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment