உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை சீர்குலைத்து, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.டி. செனவிரத்ன தெரிவித்தார்.
புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் அக்குழுக்கள் தொடர்பாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கெதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் நேற்று (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் இருந்து புதிய விடயங்களை கண்டறியும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை சில குழுக்கள் சீர்குலைத்து முயற்சிப்பது புலனாய்வு பிரிவுகள் அடையாளம் கண்டுள்ளன. இந்த நபர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கெதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும். விசாரணைகளைத் தடுக்கும் முயற்சிகள் மூலம் நாட்டை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் மேலும் கூறினார்.
இதனை இங்கு உருத்து தெரிவித்த, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த, பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் அரசியல் ரீதியிலான ஒத்துழைப்புக்கு இடமில்லை.
சட்ட விரோத ஆயுத பரிமாற்றம், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பு அல்லது பாதுகாப்பு வழங்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.
படைகளில் சேர்ந்து குறுகிய கால ஆயுதப் பயிற்சி பெற்ற முப்படை வீரர்கள் படைகளை விட்டு தப்பியோடிய நிலையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கு காணப்படுகிறது. அத்தகைய நபர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சினால் விநியோகிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கூறப்பட்ட நிலையில், அநேகமானவர்கள் அதனை மீளஒப்படைத்துள்ளபோது, 48 பேர் மாத்திரமே இன்னும் உரிய முறையில் ஒப்படைக்காமல் உள்ளனர் என தெரிவித்தார்.
ஸாதிக் ஷிஹான்
No comments:
Post a Comment