முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கொன்றிற்காக நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு தவறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட மேலும் பல சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது.
2022ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராக தவறியுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பல சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.
மேற்படி முறைப்பாட்டு மனு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின்போது குறித்த முறைப்பாட்டில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பலர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
அதன்போதே சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் 11 சந்தேகநபர்கள் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக முறைப்பாட்டை பதிவு செய்த கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் முன்னேற்றம் குறித்து ஜூன் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அதேவேளை, நீதிமன்றத்தில் ஆஜராகிய ஹிருணிகா பிரேமச்சந்திர தனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தனது சட்டத்தரணி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்றுக் கொண்டுள்ள நீதவான் அந்த பிடியாணையை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment